சிங்கப்பூரில் உள்ள ஆயுள் காப்புறுதி நிறுவனங்கள் 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் காப்புறுதிக் கோரிக்கைகள், முதிர்வுப் பலன்களுக்காக $15 பில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளன. இதில் காப்புறுதித் திட்டங்களின் முதிர்வுப் பலன்களே பெரும்பகுதியாக அமைந்தன. அதனைத் தொடர்ந்து, சுகாதாரப் பராமரிப்பு, ஏனைய காப்புறுதிப் பாதுகாப்புகளுக்கான கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கம் வியாழக்கிழமை (நவம்பர் 12) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மொத்தமாக வழங்கப்பட்ட தொகையில் முதிர்வுப் பலன்கள் ஏறத்தாழ 74 விழுக்காடாக, அதாவது $11.2 பில்லியனாக இருந்தது. அதேவேளை, தனிநபர் மருத்துவக் காப்புறுதித் திட்டங்களின்கீழ் ஏறத்தாழ $2.2 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடுமையான நோய், மரணம், முழுமையான நிரந்தர ஊனம் ஆகியவற்றுக்கான தனிநபர் ஆயுள் காப்புறுதித் திட்டங்களின்கீழ் $1.7 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடுமையான நோய்களுக்கான கோரிக்கைகள் மட்டுமே $756 மில்லியனாகப் பதிவாகியுள்ளது.
மருத்துவக் காப்புறுதிக் கோரிக்கைகளுக்காக வழங்கப்பட்ட $2.2 பில்லியனில், $2.1 பில்லியன் ஒருங்கிணைந்த ‘ஷீல்ட்’ திட்டங்கள் மற்றும் அவற்றின் கூடுதல் இணைப்புத் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டது.
இதில் கூடுதல் இணைப்புத் திட்டங்கள் 24.1 விழுக்காடாக அமைந்தன. எஞ்சிய $115.2 மில்லியன் ஏனைய மருத்துவத் திட்டங்கள், இணைப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ‘ஷீல்ட்’ திட்டங்கள் மற்றும் அவற்றின் இணைப்புத் திட்டங்களின்கீழான கோரிக்கைகள் காலாண்டுக்குக் காலாண்டு 6.7 விழுக்காடு உயர்ந்து, இரண்டாம் காலாண்டில் பதிவான $695.1 மில்லியனிலிருந்து மூன்றாம் காலாண்டில் $742 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் புதிய வர்த்தகத்துக்கான மொத்த எடையிடப்பட்ட காப்புறுதித் தவணைத் தொகை ஆண்டுக்கு ஆண்டு 15 விழுக்காடு அதிகரித்து $5.5 பில்லியனாகப் பதிவாகியுள்ளது. வலுவான பொருளியலே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கம் தெரிவித்துள்ளது.
