சமூகச் சேவை அமைப்புகளில் பணியாற்றுவோர்க்கு ஆதரவான பணிச்சூழலை உருவாக்க $15 மில்லியன் மதிப்பில் சமூகப் பராமரிப்பு ஊழியருக்கான பாதுகாப்பு நிதி தொடங்கப்படவுள்ளது.
தேசியச் சமூகச் சேவை மன்றம் அறிவித்துள்ள இந்நிதி, பிப்ரவரி 1ஆம் தேதி நடப்புக்கு வரும். இது ஏறத்தாழ 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அமையும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும், தேசியச் சமூகச் சேவை மன்றமும் குறிப்பிட்டன.
சமூகச் சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து அறிவித்திருந்தார்.
இத்திட்டம் குறித்து ஜனவரி 24 ஆம் தேதியன்று காஸா ரவுதா அமைப்பு நடத்திய ‘வலுவான குடும்பங்கள்; பாதுகாப்பான இல்லங்கள்’ எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் கோ பெய் மிங் பேசினார்.
“சமூகப் பாதுகாப்பின் தொடர்பில் பணியாற்றுவது கடினமானது. பிரச்சினைகளை எதிர்கொள்வோரிடம் தொடர்ந்து பேசிப் பழகுவது அவர்களின் மனத்துக்கும் அழுத்தமாக அமையலாம். மனமுடையச் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபடுவது தெரிகிறது,” என்றார் திரு கோ.
அதனைச் சரிசெய்ய ஆதரவளிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைச் சுட்டிய அவர், பல்வேறு சமூகச் சேவை அமைப்புகளும் ஊழியர்களின் மனநலனில் அக்கறை கொண்டு அவர்களைப் பாதுகாக்கும் இந்த நிதித்திட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அசம்பாவிதமாக உயிரிழந்த சிறுமி மேகன் கங்கின் மரணம் குறித்த விவாதங்களையடுத்து முன்வைக்கப்பட்ட ஏழு முக்கியப் பரிந்துரைகளில் குழந்தைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர்க்கான ஆதரவும் அடங்கும்.
அதன் நீட்சியாக இத்திட்டம் அறிமுகம் கண்டது. இத்திட்டத்தில், வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் பணியாற்றுவோர்க்குச் சமூகச் சேவை மன்றங்களில் ஆதரவு கிடைக்கும்.
தொடர்புடைய செய்திகள்
குடும்பச் சேவை மையங்கள், நெருக்கடிகாலத் (crisis shelters) தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் சமூகப் பணியாளர்கள், இணைச் சமூகப் பணியாளர்கள், பராமரிப்பு ஊழியர்கள், அவர்களின் மேலதிகாரிகள் இந்நிதியின் மூலம் ஆதரவு பெறுவர்.
அவர்கள் மனநல ஆதரவும் பயிற்சிகளும் பெற உதவுவதுடன், ஈராண்டு அனுபவம் உள்ள பாதுகாப்பு வழிகாட்டிகளுக்கு இரு வார விடுமுறையளிக்க, மாற்று ஊழியர் ஏற்பாடுகளுக்கும் இந்நிதியைப் பயன்படுத்த முடியும்.
இதுகுறித்துக் கருத்து தெரிவித்த காசா ரவுதாவின் நிர்வாக இயக்குநர் சஹாரா ஆரிப், “வன்முறைக்கு ஆளான சிலரது வாழ்வை நினைக்கும்போது இப்போதும் மனம் உடையும். அது மனத்தில் ஆழமாகப் பதிந்து நம் மனநலனைப் பாதிக்கும். இவ்வகையான ஆதரவுகள் ஊழியர்களுக்கு மிகவும் சிறப்பாக அமையும்,” என்றார்.
தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகி, அவர்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டினார்.
மான்ஃபோர்ட் கேர் சமூக அமைப்பின் வன்முறைத் தடுப்புப் பிரிவு சமூகப் பணியாளர் ரிக்கி ஓங் ரூய் கீ, “இந்த ஆதரவு சமூகப் பணியாளர்களுக்கு முறையான ஓய்வளித்து, ஓய்வுக்குப்பின் பணிக்குத் திரும்பும்போது பணியில் மேலும் கவனம் செலுத்த உதவுகிறது. இது பணியின் தரத்தை மேம்படுத்தவும் உதவும்,” என்றார்.
மான்ஃபோர்ட் ஊழியர்களின் பயிற்சி, வழிகாட்டுதல்கள், குழு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்காக இதைப் பயன்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
காசா ரவுதா விழிப்புணர்வு நிகழ்ச்சி
குடும்ப வன்முறை குறித்த புரிதலை அதிகரிக்கவும், அதன் தொடர்பிலான தவறான நம்பிக்கைகள், உண்மைகளைத் தெரியப்படுத்தும் வகையிலும் ‘வலுவான குடும்பங்கள்; பாதுகாப்பான இல்லங்கள்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
‘அவர் தெம்பனீஸ் ஹப்’ வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
அவர்களுக்கு, வன்முறை தொடர்பான விளையாட்டுகள், இருவழித் தொடர்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் தமது நான்கு வயது மகளுடன் பங்கேற்ற புஷ்பேந்திரா, “குடும்ப வன்முறை யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். வயது, பாலின வேறுபாடுகள் இதில் இல்லை. என் மகளுக்குச் சிறு வயதிலிருந்தே இது குறித்தத் தகவல்கள் தெரியவேண்டும் என்பதற்காக அழைத்து வந்தேன்,” என்றார்.
அனைத்து வயதினருக்கும் புரியும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது சிறப்பு எனவும் அவர் பாராட்டினார்.

