தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுத் தேர்தலில் 15 தனித்தொகுதிகள், 18 குழுத்தொகுதிகள்

3 mins read
185b8704-f632-492a-943a-00580789798e
தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. - கோப்புப் படம்: சாவ் பாவ்
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வாக்காளர் பதிவேடுகளைப் புதுப்பித்து அங்கீகரிப்பதே அடுத்த முக்கிய நடவடிக்கையாகும்.
பிரதமர் லாரன்ஸ் வோங்

இவ்வாண்டின் சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்கான தொகுதி எல்லைகள் வரையப்பட்டுள்ளன.

கூடுதலாக ஒரு குழுத்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒரு தனித்தொகுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) அறிவிக்கப்பட்டது. வாக்களிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதிருக்கும் 93லிருந்து 97க்கு அதிகரிக்கும்.

அதோடு, தற்போதிருக்கும் 31 தொகுதிகளில் 22ல் எல்லைகள் மாற்றம் காண்கின்றன.

தொகுதி எல்லைகள் அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது, அடுத்த பொதுத் தேர்தலை நோக்கிய பயணத்தில் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த பொதுத் தேர்தல் இவ்வாண்டு முற்பாதியில் நடத்தப்படும் என்பது எதிர்பார்ப்பு.

பாசிர்-ரிஸ் பொங்கோல், செம்பவாங், தெம்பனிஸ் குழுத்தொகுதிகளிலும் ஹொங் கா நார்த், பொத்தோங் பாசிர் தனித்தொகுதிகளிலும் வாக்காளர் எண்ணிக்கை கணிசமான அளவில் கூடியிருப்பதாகத் தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு, அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மக்கள்தொகை சம்பந்தப்பட்ட மாற்றங்கள், இவ்வட்டாரங்களில் இடம்பெற்றுள்ள புதிய வீடமைப்புத் திட்டங்கள் போன்றவை காரணங்கள் என்று குழு விளக்கியது.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு இத்தொகுதிகள் ஒவ்வொன்றிலும் வாக்காளர் எண்ணிக்கை 10,000க்கும் மேல் கூடியுள்ளது.

இத்தொகுதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள், இவற்றைச் சுற்றியுள்ள தொகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு தெரிவித்தது. அந்த வகையில், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுத்தொகுதிகளின் எண்ணிக்கை ஆறிலிருந்து எட்டுக்கு அதிகரித்துள்ளன. அதேவேளை, ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுத்தொகுதிகள் 11லிருந்து 10க்குக் குறைந்துள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நான்கு-உறுப்பினர் குழுத்தொகுதியான பொங்கோல் குழுத்தொகுதி முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும். இக்குழுத்தொகுதி, பழைய பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியையும் பழைய பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியின் சில பகுதிகளையும் உள்ளடக்குகிறது. அதேபோல், பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி இப்போது சிறிதாக்கப்பட்டு, பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

ஐந்து தனித்தொகுதிகள் அகற்றப்பட்டுள்ளன. அதேநேரம், ஆறு புதிய தனித்தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புக்கிட் பாத்தோக், ஹோங் கா நார்த், மெக்பர்சன், பொங்கோல் வெஸ்ட், யூஹுவா ஆகிய தனித்தொகுதிகள் அகற்றப்பட்டவை. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தனித்தொகுதிகள் புக்கிட் கொம்பாக், ஜாலான் காயு, ஜூரோங் சென்டரல், குவீன்ஸ்டவுன், செம்பவாங் வெஸ்ட், தெம்பனிஸ் சங்காட் ஆகியவையாகும். புதிய தனித்தொகுதிகள் அனைத்தும் தற்போதிருக்கும் குழுத்தொகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டவை.

தெம்பனிஸ் வெஸ்ட்டில் உள்ள மூன்று வாக்களிப்பு வட்டாரங்கள், எதிர்க்கட்சியின்கீழ் உள்ள அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

ஒன்பது தொகுதிகளின் எல்லைகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பாட்டாளிக் கட்சியின்கீழ் உள்ள செங்காங் குழுத்தொகுதி அவற்றில் ஒன்றாகும். பீஷான்-தோபாயோ, ஜாலான் புசார், மார்சிலிங்-யூ டீ, நீ சூன் குழுத்தொகுதிகளும் புக்கிட் பாஞ்சாங், ஹவ்காங், மேரிமவுண்ட், பையனியர் தனித்தொகுதிகளும் மாற்றம் காணாத இதர எட்டு தொகுதிகள்.

ஏறத்தாழ 2,753,226 வாக்காளர்கள் இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை, 2020 பொதுத் தேர்தலில் பதிவானதைவிட 101,791 அதிகமாகும்.

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு, கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7) தனது அறிக்கையைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் சமர்ப்பித்தது. தங்களின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அறிக்கை தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டதை பிரதமர் வோங் ஃபேஸ்புக் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

“தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வாக்காளர் பதிவேடுகளைப் புதுப்பித்து அவற்றை அங்கீகரிப்பதே அடுத்த முக்கிய நடவடிக்கையாகும்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்