இஸ்ரேலுக்கு எதிரான போரில் காஸா மக்கள் நிலைகுலைந்துள்ளனர். பட்டினியால் ஆயிரக்கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காஸா மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை சிங்கப்பூர் வழங்கியுள்ளது. ஏறத்தாழ 15 டன் அத்தியாவசியப் பொருள்களை சிங்கப்பூர் ஆகாயப் படை விமானம் ஒன்று வான்வழி விநியோகித்தது.
இந்நடவடிக்கை ஆகஸ்ட் 12ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது.
வெளிநாட்டு விமானப் படைகளுடன் இணைந்து இத்தகைய வான்வழி விநியோகத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படைகள் ஈடுபட்டிருப்பது இதுவே இரண்டாவது முறை.
இதுவரை காஸாவுக்கு ஒன்பது முறை அத்தியாவசியப் பொருள்களை சிங்கப்பூர் அனுப்பிவைத்துள்ளது.
வான்வழி விநியோகத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் ஜோர்தானிலிருந்து சிங்கப்பூர் திரும்பிவிட்டதாக தற்காப்பு அமைச்சு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) தெரிவித்தது.
சிங்கப்பூர் அனுப்பிவைத்த அத்தியாவசியப் பொருள்களில் சுகாதார அமைச்சு வழங்கிய மருந்துகள், அரசு சார்பற்ற அமைப்புகள் வழங்கிய உணவுப் பொருள்கள் ஆகியவை அடங்கும்.
காஸா மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைத் திரட்டி விநியோகிக்கும் பணிகளை சாங்கி வட்டார மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு நிலையம் செயல்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்பு 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று காஸா மக்களுக்கு சிங்கப்பூர் ஆகாயப் படை வான்வழியாக அத்தியாவசிப் பொருள்களை விநியோகித்தது.
தகவல் கிடைத்த குறுகிய காலகட்டத்தில் செயல்படும் ஆற்றலை சிங்கப்பூர் ஆகாயப் படை கொண்டிருப்பதை இந்த வான்வழி விநியோகம் காட்டுவதாக அதன் தலைவர் மேஜர் ஜனரல் கெல்வின் ஃபான் தெரிவித்தார்.
உதவி, ஆதரவு வழங்கிய ஆகாயப் படை வீரர்களுக்கும் தற்காப்புப் பங்காளிகளுக்கும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.