பிடாடாரி பார்க், செங்காங் வெஸ்ட், தெம்பனிஸ் நார்த் போன்ற பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்குப் பலனளிக்கும் வகையில் 150 அஞ்சல் பொட்டலப் பெட்டகங்கள் (parcel lockers) நிறுவப்படவிருக்கின்றன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அவை நிறுவப்படும்.
‘பிக் நெட்வொர்க்’ (Pick Network) கட்டமைப்பு அவற்றுக்கான செயலாக்கப் பொறுப்பை ஏற்கும்.
இவற்றின் சிறப்பம்சம், பொட்டலத்தைப் பெறத் தவறியோர் மீண்டும் விநியோகிக்கக் கோருதல், திருப்பித் தரும் பொட்டலங்களைப் பெற்றுக்கொள்ள யாராவது வரும்வரை காத்திருத்தல் போன்ற சிரமங்கள் இருக்கமாட்டா.
ஒரு நாளின் எந்த நேரத்திலும் குடியிருப்பாளர்கள் தங்களுக்கான அஞ்சல் பொட்டலங்களைப் பெற்றுக்கொள்ளவோ திருப்பித் தரவோ முடியும்.
இத்தகைய பெட்டகத்தின் மாதிரி ஒன்று, மேக்ஸ்வெல் ரோட்டில் உள்ள நகர மறுசீரமைப்பு ஆணையத்தில் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
அரசாங்கமும் துறை சார்ந்தோரும் பொருள் விநியோக நடைமுறைகளை மேம்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளை அக்கண்காட்சி எடுத்துக் கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
‘பிக் நெட்வொர்க்’ கட்டமைப்பை தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் நடத்தி வருகிறது.
தற்போது அது சிங்கப்பூர் முழுவதும் 1,010 அஞ்சல் பொட்டலப் பெட்டகங்கள் மூலம் சேவை வழங்குகிறது.
சமூக மன்றங்கள், குடியிருப்புப் பேட்டைகள் போன்றவற்றில் அவை அமைந்துள்ளன.
2021ஆம் ஆண்டில் அன்றாடம் அவற்றின் விநியோகச் சேவையை நாடிய பொட்டலங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100ஆக இருந்தது. 2024ல் அந்த எண்ணிக்கை 20,000க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. ‘பிக் நெட்வொர்க்’ கட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி நியூ சூன் டீ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
மளிகைப் பொருள்கள் விநியோகிப்புக்கு ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.
டான் டோக் செங் மருத்துவமனை, உட்லண்ட்ஸ் ஹெல்த் ஆகியவற்றுடன் இணைந்து மருந்து விநியோகத்தை அது சோதித்து வருகிறது. அவசரமாகத் தேவைப்படாத மருந்துகளை நோயாளிகள் இதன் மூலம் பெற்றுக்கொள்ள அது வகைசெய்கிறது.
இதேபோன்ற சேவையை வழங்கும் ‘கூரியர் ஹப்’ திட்டம் குறித்தும் அமைச்சர் லீ எடுத்துரைத்தார். 2021, 2022ஆம் ஆண்டுகளில் சோதிக்கப்பட்ட அத்திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
இதன்கீழ், ‘கூரியர்’ அஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்கள், அஞ்சல்களைப் பிரித்தல், அனுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகளில் உள்ள 50க்கு மேற்பட்ட பலமாடிக் கார் நிறுத்துமிடங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்களை நகர மறுசீரமைப்பு ஆணையத்திற்கு 2025 ஜனவரி மாத இறுதிக்குள் அனுப்பவேண்டும்.


