ஆறு குளிரூட்டிச் சாதனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500க்கும் மேற்பட்ட பெட்டி கள்ள சிகரெட்டுகளை சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
செம்பவாங்கில் இருக்கும் கெம்பாஸ் கிரசெண்ட் பகுதியில் அதிகாரிகள் டிசம்பர் 8ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில் 39 வயது ஆடவர் ஒருவர் கைதானதாக சுங்கத்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சீன நாட்டவரான அந்த ஆடவர், பண்டகசாலை ஒன்றில் இருந்து சரக்குகளைப் பெற்று அவற்றை வாகனம் ஒன்றில் ஏற்றியதை அதிகாரிகள் கண்டனர். அந்த டிரக் வாகனம் சிங்கப்பூரில் பதியப்பட்டதாகும்.
அதிகாரிகள் அந்த வாகனத்தை அணுகி சோதனையிட்டதில், குளிரூட்டிச் சாதனங்களில் 1,512 பெட்டிகளில் கள்ள சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அந்தச் சரக்கு சீனாவில் இருந்து வந்தது என்பது புலன்விசாரணை மூலம் தெரியவந்தது.
தொடர்ந்து அந்த ஆடவரின் வசிப்பிடத்தில் சோதனையிட்டதில் மேலும் ஒரு பெட்டி கள்ள சிகரெட்டும் ஒன்பது பாக்கெட்டுகள் சிகரெட்டுகளும் அகப்பட்டதாக சுங்கத்துறை கூறியது.
கள்ள சிகரெட்டுக்குச் செலுத்த வேண்டய தீர்வை $129,280. ஜிஎஸ்டி வரி $10,370. வாகனம் உட்பட அனைத்தும் கைப்பற்றப்பட்டன.
கைதான ஆடவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை தொடங்கி இருப்பதாக சுங்கத்துறை தெரிவித்தது.
கள்ள சிகரெட்டை வாங்குவது, விற்பது, கொண்டு செல்வது, கொண்டு கொடுப்பது, கிடங்குகளில் சேர்த்து வைப்பது எல்லாம் சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் கடுமையான குற்றச்செயல்களாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

