சமூகத்தினருக்கு உதவ 15 அறப்பணி அமைப்புகளுக்கு மொத்தம் 15,000 கிலோ அரிசி விநியோகிக்கப்படவிருக்கிறது.
இது குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் முதியோர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புக்கிட் கேன்பரா உணவங்காடி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அரிசியுடன் மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகளையும் விநியோகிக்கும் புதிய முயற்சி தொடங்கப்பட்டது.
புட் கேனோப்பியின் துணை நிறுவனமான கேனோப்பி உணவங்காடிகளின் குழுமம், அந்த உணவங்காடி நிலையத்தை நடத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சரும் செம்பவாங் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான ஓங் யி காங் கலந்துகொண்டார்.
கேனோப்பி அங்காடி நிலையக் குழுமத்தின் இயக்குநரான ஜோய் டான், உதவிப் பொருள்களை விநியோகிப்பதற்காக உணவங்காடி கடைக்காரர்களையும் ஆதரவாளர்களையும் பங்காளிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
உதவி தேவைப்படுவோர்க்கு ஆதரவளிக்க வணிகர்களையும் தனிப்பட்டவர்களையும் இந்நிகழ்ச்சி ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
உணவங்காடிக் கடைக்காரர்கள் உணவுகளை விற்பவர்கள் மட்டுமல்லர், சமூகத்தின் ஒரு தூணாகவும் இருக்கிறார்கள் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
பயனடையும் 15 அறப்பணி அமைப்புகளில் ‘அசெண்டிங் ஹோப் கம்யூனிட்டி சர்வீசஸ்’ அமைப்பும் ஒன்று. இதற்கு 200 அரிசிப் பைகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு பையிலும் 2.5 கிலோ அரிசி உள்ளது.
அந்த லாப நோக்கற்ற அமைப்பின் நிர்வாக இயக்குநரான இவா இங், “வாம்போ, தோ பாயோ போன்ற பகுதிகளில் வாடகை வீடுகளில் வசிக்கும் தனியாக உள்ள முதியோர்களுக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் அரிசி விநியோகிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

