எதிர்காலத்தை வலுப்படுத்தும் $155 பில்லியன் பட்ஜெட்

எதிர்காலத்தை வலுப்படுத்தும் $155 பில்லியன் பட்ஜெட்

3 mins read
நிகழ்காலச் சவால்களைச் சமாளிக்க கூடுதல் உதவி
88e71bde-1678-44b4-9f7e-0aac1d064141
2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்வதற்காக பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு வருகைதந்தார் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் எதிர்காலத்தை வலுப்படுத்த $155 பில்லியன் வரவுசெலவுத் திட்டத்தை பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

நிலைத்தன்மையற்ற, பிளவுபட்ட உலகப் பொருளியல் சூழலின் பின்னணியில், சிங்கப்பூரின் உத்திகளைப் புதுப்பித்து, உயிர்ப்புடன் வைத்திருக்க முனைகிறது இந்த நிதி ஆண்டின் வரவுசெலவுத் திட்டம்.

கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்ற பின்னர் திரு வோங் தாக்கல் செய்த முதல் வரவுசெலவுத் திட்டத்தில், நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான அடிப்படைத் திட்டங்களை முன்வைத்துள்ளார்.

“நாட்டின் கடந்தகால வெற்றி மட்டுமே எதிர்காலத்திற்கு இட்டுச்செல்லாது. முன்னர் வடிவமைக்கப்பட்ட உத்திகளுக்கு ஏற்றவாறு நிலைமை மாறும் என்று காத்திருக்க முடியாது,” என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 12) நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த பிரதமர் வோங் கூறினார்.

முக்கியமாக, செயற்கை நுண்ணறிவை முழுவீச்சில் பயன்படுத்தும் முதல் நாடாக சிங்கப்பூர் திகழ தொழில்துறை, கல்வித்துறை, நிறுவனச் செயல்பாடு, மக்களின் திறன் மேம்பாடு என அனைத்திலும் ‘ஏஐ’ பயன்பாட்டை ஊக்குவிக்க நிறுவனங்களுக்கு வரிக்கழிவுகள், ஊழியர் பயிற்சி, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குதல் போன்ற திட்டங்களைப் பிரதமர் வோங் அறிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் சிறப்பான பயன்பாடு சிங்கப்பூர்க்கு உத்திபூர்வ நன்மையாக இருக்கும். மிகக் குறைவான இயற்கை வளங்கள், விரைவான மூப்படையும் மக்கள்தொகை, சவால்மிக்க ஊழியர் சந்தை ஆகியவை சிங்கப்பூரின் கட்டமைப்புத் தடைகளைச் சமாளிக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

பல நாடுகள் தன்னைப்பேணித்தனத்துடன் செயல்படத் தொடங்கினாலும் சிங்கப்பூருக்கு வேறு வழி இல்லை என்று எச்சரித்த அவர், பங்காளித்துவங்களும் பொருளியல் வாய்ப்புகளும் தற்போது பரந்த நிலையில் இல்லை என்றார்.

“சிங்கப்பூர் இதுபோன்ற புதிய வடிவங்களுக்குத் தகவமைத்துக்கொள்ளவேண்டும். திறந்த பொருளியலாக இருக்கும் போதிலும் விவேகத்துடனும், மேலும் பரந்த நிலையிலும், இன்னும் மீள்திறன்மிக்க வழியிலும் தொடர்புகளை அமைத்துக்கொள்ளவேண்டும்,” என்றார் திரு வோங்.

எதிர்காலத்தைத் திட்டமிடும் அதேநேரத்தில், நிகழ்காலச் சவால்களையும் பிரதமர் கருத்தில்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைச் செலவின அழுத்தங்களைச் சமாளிக்க $200 முதல் $400 வரையிலான வாழ்க்கைச் செலவு சிறப்புத் தொகை, கூடுதல் யு-சேவ் தள்ளுபடிகள், $500 சிடிசி பற்றுச்சீட்டுகள் என்று சிங்கப்பூரர்களுக்கு உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாலர் பள்ளிகளுக்கான மானியத் திட்ட மேம்பாடு, சிறு பிள்ளைகளைக் கொண்ட 60,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவும். மேலும், முதியோருக்குக் கூடுதல் உதவி, இளையர்களின் பங்களிப்பையும் துடிப்பையும் மேலும் ஊக்குவிக்க திட்டங்கள் போன்றவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், சிங்கப்பூரின் தனித்தன்மையான பண்பாடு, கலைகளைப் பேணவும் விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய மரபுடைமை நிலையத்துக்கான கூடுதல் ஆதரவும் அடங்கும்.

வரவுசெலவுத் திட்ட அறிக்கையின் நிறைவில் சிங்கப்பூரின் தொடக்கக் காலத்தை மேற்கோள்காட்டிப் பேசினார் திரு வோங்.

குறிப்பாக, நிறுவியோர் நினைவக ஏற்பாட்டில் சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘பார்வையாளர்கள் மட்டுமல்ல’ கண்காட்சியைச் சுட்டிப் பேசிய பிரதமர், சிங்கப்பூரர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்க இயலாது என்றும் ஒருவருக்கொருவர் அரவணைத்து, சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்தி, தேசத்துக்குப் பங்காற்றவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்