இவ்வாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நிலவரப்படி, 350,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் (Lasting Powers of Attorney) பதிவுசெய்துள்ளனர்.
பொதுக் காப்பாளர் அலுவலகம் தனது 15ஆம் ஆண்டுநிறைவை இவ்வாண்டு கொண்டாடுகிறது.
அதையொட்டி, சன்டெக் சிங்கப்பூர் மாநாடு மற்றும் கண்காட்சி நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் ‘எல்பிஏ’ எழுதுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிங்கப்பூர் மக்களுக்கு அவர்களின் எதிர்காலப் பராமரிப்பு தேவைகளுக்குத் தயாராக உதவவும் பொதுக் காப்பாளர் அலுவலகத்துடன் இணைந்து செயல்பட்ட 340க்கும் மேற்பட்ட பங்காளிகள், தன்னார்வலர்களின் பங்களிப்புகள் கௌரவிக்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் கோ பெய் மிங், ‘எல்பிஏ’ எழுதிவைப்பது இன்று சிங்கப்பூரில் ஓர் இயல்பான நடைமுறையாக நிலைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். ஆனால், சிங்கப்பூர் ‘சூப்பர்-ஏஜ்டு’ சமூகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பங்காளிகளின் தொடர்ந்த ஆதரவு இன்னும் தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
“நமது கூட்டு முயற்சிகளின் பலனாக, இதுவரை 80,000க்கும் மேற்பட்ட வருங்கால நலப் பாதுகாப்பு திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மேலும், 350,000 சிங்கப்பூரர்கள் நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பதிவுசெய்துள்ளனர். கிட்டத்தட்ட 1.8 மில்லியன் பேர் தங்கள் மத்திய சேம நிதி நியமனங்களையும் செய்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
பொதுவாக, காலமாகும் ஐந்து பேரில் நால்வர் நியமனத்தைச் செய்திருப்பார்கள் என்று திரு கோ தெரிவித்தார்.
எந்த நேரத்திலும் யாருக்கும் திடீர் விபத்து ஏற்படக்கூடும் என்பதால், நீண்டகால அதிகாரப் பத்திரம் தொடர்பான உரையாடல்களை முன்கூட்டியே தொடங்குமாறு திரு கோ சிங்கப்பூரர்களை வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, நீண்டகால அதிகாரப் பத்திரம் 1ஆம் படிவத்திற்கான விண்ணப்பக் கட்டணம் 2026 மார்ச் மாதம் வரை விலக்கு செய்யப்படும் என்பதையும் அவர் நினைவூட்டி, அனைவரும் தங்கள் எதிர்கால பராமரிப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, சமூகப் பங்காளிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நீண்டகால அதிகாரப் பத்திரம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, சமூகத்தில் பதிவு செய்யும் பணியை ஊக்குவித்ததற்காக இந்து அறக்கட்டளை வாரியம் கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதை, வாரியத்தின் சார்பில் சமூக சேவைக்குழுத் தலைவரும் 1996 முதல் வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவருமான திருவாட்டி சுசிலா கணேசன், 54, பெற்றுக்கொண்டார்.
“கடந்த நான்கு ஆண்டுகளாக, வாரியம் ஆண்டுதோறும் இலவச பத்திரப்பதிவுச் சேவைகளை வழங்கி வருகிறது. இதன்மூலம் சமூகத்தினர் இந்த முக்கியமான வசதியை எளிதில் அணுக முடிகிறது. பல குடும்பங்கள், குறிப்பாக இந்து சமூகத்தில், யாரை நியமிக்கலாம், அல்லது தங்கள் குழந்தைகள் அனைவரையும் நியமிக்க முடியுமா போன்ற கேள்விகளை அடிக்கடி முன்வைக்கிறார்கள்,” என்று அவர் விளக்கினார்.
‘எல்பிஏ’ என்பது வயதானவர்களுக்கு மட்டுமல்ல, 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்தினார்.
“பல இளையர்கள் தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா - பாட்டிக்காக பத்திரத்தைப் பதிவுசெய்வதற்கு அடிக்கடி முன்வருவதை நாங்கள் பார்க்கிறோம். ஆனால், தங்களுக்காக அவர்கள் செய்வதில்லை. அனைவரும் முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம். ஏனெனில் எதிர்பாராத நிகழ்வுகள் எந்த நேரத்திலும் நடக்கக்கூடும்.
“எடுத்துக்காட்டாக, ஒருவர் திடீரென சிந்தனைத்திறனை இழக்கும்போது, பத்திரம் இருந்தால் அவரது குடும்பத்தினர் செலவுமிக்க, நீண்டகால நீதிமன்ற நடைமுறைகளைத் தவிர்க்க முடியும்,” என்றார் திருவாட்டி சுசிலா.
இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும், அதுதொடர்பான தகவல் ஊடகங்களில் பரவலாகக் கிடைப்பதும் உற்சாகமளிக்கிறது என்றாலும், ‘எல்பிஏ’ எழுதுவதையும் வாழ்க்கையின் ஓர் இயல்பான நடைமுறையாக மாற்றுவதற்குப் மேலும் பணியாற்ற வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் எனில், நீண்டகால அதிகாரப் பத்திரச் சான்றிதழுக்குக் கட்டணம் செலுத்த சமூக மேம்பாட்டு மன்றப் (சிடிசி) பற்றுச்சீட்டுகளையும் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளையும் பயன்படுத்தலாம்.