மலேசிய காவல்துறையின் அதிரடிச் சோதனையில், எல்லை கடந்த மோசடி கும்பலுடன் தொடர்புடைய 16 மலேசியர்கள் ஜனவரி 13ஆம் தேதி கோலாலம்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் $1.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்தனர்.
சிங்கப்பூர் மக்களை இலக்காகக்கொண்டு அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடிகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் அந்த நடவடிக்கையை மலேசியக் காவல்துறையுடன் இணைந்து சிங்கப்பூர் காவல்துறை முறியடித்தது.
24 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட அந்த மோசடிக்காரர்களை மலேசிய காவல்துறை கைது செய்ததாக ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
அவர்கள் பொதுவாக டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி அல்லது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பாதிக்கப்பட்டவர்களை அழைப்பார்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களில் கடன்பற்று அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும், அல்லது அவர்களின் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்குரிய அல்லது மோசடி பரிவர்த்தனைகள் நடந்திருப்பதை வங்கி கண்டறிந்திருப்பதாகவும் கூறுவார்கள்.
அந்த அழைப்புகள் பின்னர் மற்றொரு மோசடிக்காரருக்கு மாற்றப்படும். அந்த அழைப்பில் சிங்கப்பூர் காவல்துறை அல்லது சிங்கப்பூர் நாணய ஆணையம் அரசாங்க அதிகாரிகளாக நடித்து ஏமாற்றுவார்கள்.
சில சந்தர்ப்பங்களில், மோசடிக்காரர்கள் காவல்துறை அல்லது நாணய ஆணையம் அதிகாரிகள் போல உடையணிந்து, அந்த முகவையின் சின்னத்தைக் காட்டும் பின்னிணியில் காணொளியில் அழைப்புகள் நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் பயன்பாடுகளில் தொடர்பு நடைபெறும். மோசடிக்காரர்கள் சில நேரங்களில் போலி அடையாள அட்டை (warrant card) அல்லது ஆவணங்களையும் காட்டுவார்கள்.
பின்னர், சட்டவிரோத பண பரிமாற்றம் போன்ற குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டுவார்கள். மேலும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றக் கூறுவார்கள்.
2024 ஜனவரிக்கும் அக்டோபருக்கும் இடையில், அத்தகைய சம்பவங்களில் குறைந்தது 1,100 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மொத்த இழப்புகள் குறைந்தது $120 மில்லியன் ஆகும்.
இவற்றில் 50க்கும் மேற்பட்ட சம்பவங்களுடன் மலேசிய கும்பல் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட 16 பேர் மீது மலேசிய நீதிமன்றத்தில் மோசடி சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் மோசடிகளில் இழந்த தொகையின் அளவு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. 26,587 சம்பவங்களில் $385.6 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது. ஆண்டின் இரண்டாம் பாதிக்கான புள்ளிவிவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.