தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாட்ஸ்அப் மோசடி: 16 வயது இளையர் உட்பட 19 பேரிடம் விசாரணை

2 mins read
f98359d6-0291-4d43-908d-2bca55a1c6b2
இவ்வகை மோசடியில் இதுவரை குறைந்தது 93 பேர் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் மொத்தத்தில் குறைந்தது $176,000 பணத்தை அவர்கள் இழந்துவிட்டதாகவும் காவல்துறை குறிப்பிட்டது. - படம்: சாவ்பாவ்

வாட்ஸ்அப் ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்பில் சந்தேகப் பேர்வழிகள் 19 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இம்மாதம் 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை தீவின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற மோசடித் தடுப்பு அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

வாட்ஸ்அப் ஆள்மாறாட்ட மோசடிகளில் ஈடுபட்ட கும்பல்களுக்கு அந்த 19 பேரும் தங்களது வங்கிக் கணக்கு, இணைய வங்கிக் கணக்கு அல்லது சிங்பாஸ் விவரங்களை வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்தது.

$200 முதல் $3,400 வரையிலான பணத்திற்காக அல்லது தாங்கள் பெறாத கடன்களுக்காக அவர்கள் இவ்வாறு செய்தனர் என்று காவல்துறை நவம்பர் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

அந்த 19 பேரில் 13 பேர் ஆண்கள், அறுவர் பெண்கள். அவர்கள் 16 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள்.

போலி வாட்ஸ்அப் இணையத்தளங்களைப் பயன்படுத்தி பயனர் ஒருவரின் கணக்கு விவரங்களைப் பெறும் மோசடிக் கும்பல், அவரது தொடர்புப் பட்டியலிலுள்ள குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் போன்றோரைத் தொடர்புகொள்வர்.

வாட்ஸ்அப் கணக்கின் உண்மையான பயனர் போலவே நடித்து, அவசரமாகப் பணம் தேவைப்படுவதாக அவர்களிடம் மோசடிப் பேர்வழி கேட்பார்.

பொருள் வாங்கியதற்குச் செலுத்துவதற்காக, அல்லது நண்பர் அல்லது உறவினரின் மருத்துவச் செலவிற்கு அவசரமாகத் தேவைப்படுவதாக மோசடிப் பேர்வழி கூறுவார்.

மேலும், தமது வங்கிக் கணக்கில் பணமெடுப்பதற்கான ஒரு நாள் வரம்பை எட்டிவிட்டதாகவும் அவர் சொல்லலாம்.

அதன்பின் முன்பின் அறிந்திராத வங்கிக் கணக்குகளுக்கு அல்லது ‘பேநவ்’ எண்களுக்கு அவர் பணம் அனுப்பிவிடச் சொல்வார். அத்துடன், பணம் அனுப்பிவிட்டதற்காக திரைச்சுடுவையும் (ஸ்கிரீன்ஷாட்) அவர் அனுப்பச் சொல்வார்.

பணம் அனுப்பியபின் சம்பந்தப்பட்ட நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரைத் தொடர்புகொண்டு, அதுபற்றிக் கூறிய பின்னரே தாங்கள் மோசடி செய்யப்பட்டதைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வர்.

இவ்வகை மோசடியில் இதுவரை குறைந்தது 93 பேர் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் மொத்தத்தில் குறைந்தது $176,000 பணத்தை அவர்கள் இழந்துவிட்டதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

மேலும், இம்மாதத் தொடக்கத்திலிருந்து குறைந்தது 237 பேர் சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கினர் என்றும் அவர்கள் குறைந்தது $606,000 பணத்தைப் பறிகொடுத்தனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.

மோசடி தொடர்பான மேல்விவரங்களுக்கு, பொதுமக்கள் www.scamalert.gov.ag என்ற இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 என்ற மோசடித் தடுப்பு உதவி எண்ணில் அழைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்