கள்ளக்காதலிக்கு வெட்டு: மணமான ஆடவருக்கு 16 ஆண்டு சிறை, பிரம்படி

கள்ளக்காதலிக்கு வெட்டு: மணமான ஆடவருக்கு 16 ஆண்டு சிறை, பிரம்படி

2 mins read
b8efb297-3538-44c6-b3bc-8caa0c27abdc
20 ஆண்டுகளுக்கு முன்னர் பழகத் தொடங்கிய ஆணும் பெண்ணும் பிரிந்த பின்னர் மீண்டும் பழகத் தொடங்கினர். அப்போது அவ்விருவருக்கும் தனித்தனியே திருமணம் முடிந்துவிட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கள்ள உறவை முறித்துக்கொள்ள முடிவெடுத்த பெண்ணை வெட்டுக் கத்தியால் வெட்டிய அவரது காதலருக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனையும் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

கடந்த 2019 நவம்பர் 30ஆம் தேதி ஜோய் லீ, 43, என்னும் பெண்ணை தாக்கியதற்காக தம் மீது சுமத்தப்பட்ட கொலைமுயற்சிக் குற்றச்சாட்டை சோங் ஷியோங் ஹுயி, 45, இவ்வாண்டு நவம்பர் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இருவரும் வெவ்வேறுவருடன் மணமானவர்கள். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பழகி வந்த இருவரும் பின்னர் பிரிந்துவிட்டனர்.

இருவருக்குத் தனித்தனியே திருமணம் முடிந்த பின்னர், 2017ஆம் ஆண்டு முதல் மீண்டும் அவர்கள் பழகத் தொடங்கினர்.

அந்த உறவை கள்ளத்தனமாகத் தொடர அவ்விருவரும் முடிவெடுத்தனர். ஆனால், இருவரின் நெருக்கத்தை 2018 நவம்பரில் திருவாட்டி லீயின் கணவர் கண்டுபிடித்தார்.

அதனைத் தொடர்ந்து, உறவை முறித்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக 2019 நவம்பர் 28ஆம் தேதி சோங்கிற்கு திருவாட்டி லீ ‘வாட்ஸ்அப்’ வழியாகத் தகவல் அனுப்பினார்.

ஆனால், உறவை முறித்தால் அந்தப் பெண், அவரது கணவர், அவரது ஆறு வயது மகள் ஆகியோரைக் கொன்றுவிட்டு தாமும் உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாக அச்சுறுத்தும் வகையில் சோங் தகவல் அனுப்பினார்.

அந்த கருத்து மோதல் தாக்குதலுக்கு இட்டுச் சென்றது.

தோ தக் ரோட்டில் உள்ள சோங்கின் பெற்றோர் வீட்டில் அந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. காயங்களுடன் அந்தப் பெண் உயிர் தப்பினார்.

அந்தப் பெண்ணை தமது பெற்றோர் வீட்டுக்கு வரவழைத்து, வீட்டுக்குள் சிக்க வைத்து சோங் தாக்குதல் நடத்தியதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தண்டனை விதித்தபோது நீதிபதி ஏய்டன் ஸு குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்