வசதிகுறைந்த 7,000 தென்கிழக்கு வட்டாரவாசிகளுக்கு 100,000 வெள்ளி மதிப்பில், வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசி, ஓட்மீல் என 550,000 உணவுக் கிண்ணங்கள் திரட்டும் இலக்கோடு 16வது ஆண்டாகத் திரும்பியுள்ளது வருடாந்தர ‘தென்கிழக்கில் ஃபேர்பிரைஸ் ரைஸ்+ நடை’ (FairPrice Walk for Rice+ @ South East) .
செப்டம்பர் 21 முதல் நவம்பர் 30 வரை மக்கள் நடக்கும் அல்லது ஓடும் ஒவ்வொரு 300 மீட்டருக்கும் ‘ஃபேர்பிரைஸ்’ அறக்கட்டளை ஒரு கிண்ணம் வெள்ளை அரிசி, ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசி, ஒரு கிண்ணம் ஓட்மீல் நன்கொடையாக அளிக்கும்.
இம்முயற்சியில் பங்கேற்க விரும்பும் சிங்கப்பூர்வாசிகள் தாம் நடந்த தொலைவை https://go.gov.sg/wfr2024 எனும் இணையப்பக்கத்தில் பதிவுசெய்யவேண்டும்.
தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி), ‘ஃபேர்பிரைஸ்’ அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நடையின் தொடக்க நிகழ்ச்சி, சனிக்கிழமை (செப்டம்பர் 21) காலை ஓசிபிசி சதுக்கத்தில் நடந்தது. அதில் 1,500க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று, 600 மீட்டர் தொடக்க நடையாக காலாங் வேவ் மால் கடைத்தொகுதியைச் சுற்றி நடந்தனர்.
தன்முனைப்புடன் சமூகத் தொண்டு
நிகழ்ச்சியில் பங்கேற்ற நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி சமூக சேவை மன்றச் செயலாளர் கலைவாணி அரசன், 20, இந்நடையைத் தம் கல்லூரியிலும் நவம்பர் 13, 14ஆம் தேதிகளில் நடத்தி உணவுக் கிண்ணங்கள் திரட்டவுள்ளார்.
“உயர்நிலைப் பள்ளியில் நான் ஆசிரியரின் ஏற்பாட்டினால் நிறைய சமூகத் தொண்டாற்றினேன். ஆனாலும், நானே என் சொந்த முயற்சியில் சமூக சேவை செய்ய விரும்புகிறேன்,” என்றார் கலைவாணி.
மறதிநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடையை ஏற்பாடு செய்துள்ளதோடு, வீணாகப் போகும் காய்கறிகளை இயோ சூ காங் வட்டாரத்திலுள்ள வசதிகுறைந்தோருக்கு விநியோகிப்பது போன்ற சமூக சேவைகளிலும் அவர் ஈடுபடுகிறார்.
‘மனநிறைவளிக்கும் முயற்சி’
‘ஃபேர்பிரைஸ்’ குழுமத்தின் ஹவ்காங் ‘பி’ கிளை மேலாளர் ராஜ்குமார் சுப்பையா, 64, இரண்டாவது ஆண்டாக இந்நடையில் பங்கேற்கிறார். சென்ற ஆண்டும் உணவு விநியோகத்தில் அவர் உதவினார்.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் வசதிகுறைந்தோரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று உணவை விநியோகித்தோம்,” என்றார் திரு ராஜ்குமார்.
இத்தனை ஆண்டுகளில் மக்கள் ஆறு மில்லியன் கிலோமீட்டருக்கும் மேல் நடந்து, 100,000க்கும் மேற்பட்ட வசதிகுறைந்த தென்கிழக்கு வட்டாரவாசிகளுக்குக் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் வெள்ளி மதிப்பிலான அரிசி, தானியங்களைத் திரட்டியுள்ளனர்.

