அப்பர் சாங்கி சாலை ஈஸ்ட்டில் ஜூன் மாதம் எம்ஆர்டி தண்டவாளத்தில் அத்துமீறி இறங்கியதாகக் கூறப்படும் 17 வயது இளையர்மீது வியாழக்கிழமை (ஜூலை 3) குற்றஞ்சாட்டப்படும்.
அந்த இளைஞர்மீது பாதுகாப்புக்கு வேண்டுமென்றே ஆபத்தை விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டும் அனுமதியின்றி அத்துமீறியதாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்படும் என்று புதன்கிழமை (ஜூலை 2) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தானா மேரா, சீமெய் நிலையங்களுக்கு இடையில் உள்ள எம்ஆர்டி தண்டவாளத்தில் ஒருவர் அத்துமீறி நுழைந்தது குறித்து ஜூன் 10ஆம் தேதி தனக்குப் புகார் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
அந்த இளையர் பின்னர் ஜூலை 1ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
அவர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் இடம் அடையாளம் காணப்பட்ட பிறகு, இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிலப் போக்குவரத்து ஆணையம் உடனடியாக அந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜூன் தொடக்கத்தில், எம்ஆர்டி தண்டவாளத்திலிருந்து எடுக்கப்பட்டதாகத் தெரியும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டதை அடுத்து, தான் காவல்துறையிடம் புகார் அளித்ததாக எஸ்எம்ஆர்டி தெரிவித்திருந்தது.
அந்தக் காணொளி வெளிச்சமில்லாத சூழலில் எடுக்கப்பட்டதுடன், அருகில் உள்ள தண்டவாளத்தில் ஒரு ரயில் கடந்து செல்வதைக் காட்டுகிறது. அதைப் படமெடுத்த நபர் பின்னர் ரயிலுக்கு அருகில் சென்று, பின்னர் தண்டவாளத்தைக் கடப்பது தெரிகிறது.

