சிங்கப்பூரில் அவசரமற்ற மருத்துவ உதவி கோருவதற்குப் பயன்படுத்தப்படும் ‘1777’ அவசர மருத்துவ வாகனத் தொலைபேசிச் சேவை, 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் முற்றிலும் நிறுத்தப்படவுள்ளது.
உள்துறை அமைச்சும் சுகாதார அமைச்சும் புதன்கிழமை (ஜூலை 1) வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளன.
அவசரமற்ற மருத்துவ, வாகனச் சேவைகளுக்கான பல்வேறு தெரிவுகள் தற்போது கிடைப்பதாலும் இந்த 24 மணி நேரத் தொலைபேசி எண்ணுக்கான அழைப்புகள் குறைந்துவருவதாலும் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சுகள் கூறின.
இந்தச் சேவை நிறுத்தப்படுவதால் ‘995’ எனும் அவசர மருத்துவ உதவி கோரும் சேவை பாதிக்கப்படாது என்றும் உயிருக்கு ஆபத்தான சூழலில் பொதுமக்கள் தொடர்ந்து அந்தச் சேவையை நாடலாம் என்றும் இரு அமைச்சுகளும் குறிப்பிட்டன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை 1998ஆம் ஆண்டு இந்த ‘1777’ சேவையை அறிமுகம் செய்தது. ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற ‘995’ அவசர மருத்துவ உதவிச் சேவையைப் பாதுகாக்கும் நோக்கில், சாதாரண மருத்துவப் போக்குவரத்துத் தேவைகளுக்காக இந்த எண் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், தற்போது பொதுமக்கள் தங்களின் அவசரமற்ற மருத்துவத் தேவைகளுக்கு அருகில் உள்ள குடும்ப மருத்துவரையோ தொலைமருத்துவச் சேவையையோ (Teleconsultation) நாடத் தொடங்கியுள்ளனர். மேலும், மருத்துவமனைக்குச் செல்ல டாக்சி, தனியார் வாடகை வாகனச் சேவைகளும் கிடைக்கின்றன.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, தனியார் மருத்துவ உதவி வாகனங்களுக்கான முன்பதிவுகளில் 6 விழுக்காடு மட்டுமே இந்த ‘1777’ எண் மூலம் செய்யப்படுகிறது. இந்த மிகக் குறைந்த பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு, இந்த ஒருங்கிணைந்த சேவைத் தளத்தைப் படிப்படியாக நிறுத்த அமைச்சுகள் முடிவு செய்துள்ளன.
பொதுமக்களுக்கான மாற்று வழிகள்
தனியார் அவசர மருத்துவ வாகனச் சேவை தேவைப்படுவோர், இத்தகைய சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களின் தொடர்பு எண்களையும் கட்டண விவரங்களையும் அறிய go.gov.sg/pao என்ற இணையப் பக்கத்தை நாடலாம்.
அவசரமற்ற உடல்நலக் குறைபாடுகளுக்கு மருத்துவ ஆலோசனைகளைப் பெற, 6262 6262 என்ற ‘நர்ஸ்ஃபர்ஸ்ட்’ (NurseFirst) உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். அங்குள்ள பயிற்சி பெற்ற தாதியர் அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்குவர்.

