சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நீடித்த நிலைத்தன்மை திட்டங்களை மேம்படுத்த $18.6 மில்லியன் நிதி வழங்கப்பட்டது. இத்தொகையை 350க்கும் மேற்பட்ட தனிநபர்கள், குழுக்கள், அமைப்புகள் பெற்றுக்கொண்டன.
‘எஸ்ஜி இக்கோ ஃபண்ட்’எனும் இந்த நிதித் திட்டம் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிவைக்கப்பட்டது.
நீடித்த நிலைத்தன்மை தொடர்பான முயற்சிகளை மேற்கொண்ட 700,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த நிதித் திட்டம் கைகொடுத்துள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.
கழிவுப் பொருள்களைக் குறைத்தல், சமூக அளவிலான உணவு உற்பத்தி, இயற்கைப் பராமரிப்பு, நீடித்த நிலைத்தன்மைக் கல்வி போன்றவற்றுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
‘எஸ்ஜி இக்கோ ஃபண்ட்’ நிதித் திட்டத்தின் ஐந்து ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில் பாசிர் ரிஸ்ஸில் உள்ள விடாசிட்டியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் கலந்துகொண்டு பேசினார் அமைச்சர் ஃபூ.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அரசாங்கத்தின் கொள்கைகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்றும் சிங்கப்பூரர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எடுக்கும் முடிவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாகவே எஸ்ஜி இக்கோ ஃபண்ட் நிதித் திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிவைத்ததாக அமைச்சர் ஃபூ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவையான நீடித்த நிலைத்தன்மை திட்டங்களைப் பொதுமக்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சிறிய வகைத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் பிரிவுக்கு ஒதுக்கப்படும் நிதி மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
2025ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச நிதி $8,000லிருந்து $30,000க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை 90க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டில் இப்பிரிவு தொடங்கப்பட்டதிலிருந்து நான்கு மாத காலகட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இதுவே ஆக அதிகம்.
எஸ்ஜி 60 உணர்வைக் கொண்டாடவும் மேலும் பெரிய திட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய சிங்கப்பூரர்கள் கொண்டுள்ள விருப்பத்தை முன்னிட்டும் ‘எஸ்ஜி இக்கோ ஃபண்ட்’ நிதித் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஃபூ கூறினார்.

