காப்புறுதி மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி அதிவேகமாக காரை ஓட்டி, காவல்துறை துரத்தியும் நிறுத்தாமல் ஆறு வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய 18 வயது இளைஞர் மீது வியாழக்கிழமையன்று (மே 28) நீதிமன்றத்தில் 18 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறார், இளையர் சட்டத்தின்கீழ், இக்குற்றங்கள் நடந்தபோது அந்த இளையர் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்ததால் அவரது பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சம்பந்தப்பட்ட இளையர் மூன்று வெவ்வேறான காலகட்டங்களில் உரிமமின்றி வாகனம் ஓட்டிய வழக்குகளில் தொடர்புடையவர். முதன்முறையாக, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதியன்று, தனது பாட்டியின் காரை அவருக்குத் தெரியாமல் எடுத்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஓட்டியுள்ளார்.
கார் காணாமல் போனதை அறிந்த அவரது பாட்டி காவல்துறையின் உதவியை நாடினார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதியன்று பதிவு ரத்து செய்யப்பட்ட கார் ஒன்றில் போலி எண் பலகையைப் பொருத்தி, ஹேக் சாலையிலிருந்து மெரினா பே சேண்ட்ஸ் வரை அந்த இளையர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதன் உச்சக்கட்டமாக, ஜனவரி 16ஆம் தேதி இரவு 10.50 மணியளவில் பாய லேபார் சாலையின் போக்குவரத்துக் காவல்துறையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களைக் கண்டதும் அந்த இளையர் தாம் ஓட்டி வந்த காரை அதிவேகமாகச் செலுத்தித் தப்ப முயன்றுள்ளார். காவல்துறையினர் அவரை விடாமல் துரத்தியபோது, மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் மணிக்கு 174 கிலோ மீட்டர் வேகத்திலும் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் அனுமதிக்கப்பட்ட குலிமார்ட் சாலையில் மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்திலும் காரைச் செலுத்தியுள்ளார்.
மேலும், சிக்னல்களில் சிவப்பு விளக்குகளில் காரை நிறுத்தாமல் போக்குவரத்துக்கு எதிர்த்திசையிலும் காரை ஓட்டி ஆபத்தை விளைவித்துள்ளார். துரத்தலின்போது, குலிமார்ட் சாலைக்கும் பாய லேபார் சாலைக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் நின்றுகொண்டிருந்த ஐந்து வாகனங்கள் மீது மோதிய இளையர் பின், மரின் பரேட் சாலை மற்றும் ஸ்டில் சாலை சவுத் சந்திப்பில் ஆறாவது வாகனம் மீது மோதி காரை நிறுத்தியுள்ளார்.
பின்னர் காரை விட்டு இறங்கித் தப்பியோட முயன்ற அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் ஓட்டிச் சென்ற காரும் போலி எண் பலகை பொருத்தப்பட்ட, பதிவு ரத்து செய்யப்பட்ட காராகும்.
நீதிமன்றத்தில் தன் மீதான குற்றங்களை ஒப்புக்கொள்வதாக அந்த இளையர் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிக் காயம் விளைவித்த குற்றத்துக்காக இளையருக்கு அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

