தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ராஃபிள்ஸ் பிளேஸ், ஹாஜி லேனில் சுகாதார அறிவியல் ஆணையம் சோதனை

18 பேர் பிடிபட்டனர்; 82 மின்சிகரெட்டுகள் பறிமுதல்

2 mins read
8abb7b4a-53d9-470d-9187-5a79b41208d1
புதன்கிழமை (ஆகஸ்ட் 20) மின்சிகரெட் புகைத்த ஒருவரிடம் விசாரணை நடத்தும் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

ராஃபிள்ஸ் பிளேசிலும் ஹாஜி லேனிலும் மின்சிகரெட் பயன்பாட்டிற்கு எதிராகச் சுகாதார அறிவியல் ஆணையம் நடத்திய சோதனை நடவடிக்கைகளில், 62 ஹீட்ஸ்டிக்ஸ் உட்பட 82 மின்சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) தொடங்கிய இரண்டு நாள் சோதனையில், 24 முதல் 48 வயதுக்குட்பட்ட 18 பேர், மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காகப் பிடிபட்டனர்.

மின்சிகரெட் புகைக்கும்போது பிடிபட்டவர்களுக்கு அதிகபட்சமாக $2,000 அபராதம் விதிக்கப்படும்.

மின்சிகரெட் பயன்படுத்துவோர் மீதான நெருக்குதலை அதிகாரிகள் அதிகரித்துள்ள நிலையில், சிங்கப்பூரில் எடுக்கப்பட்டுள்ள ஆக அண்மைச் சோதனை நடவடிக்கை இதுவாகும்.

சோதனையில் ஈடுபட்ட சுகாதார அறிவியல் ஆணையக் குழுக்களில் ஒன்றுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழுவும் சென்றது.

குற்றம் புரிந்தோரிடம் அதிகாரிகள் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டபோது மின்சிகரெட் பயன்படுத்திக்கொண்டிருந்த பெரும்பாலார் வியப்படைந்தனர்.

போட் கீயில் உள்ள ஓர் உணவகத்தின் வெளிப்புறத்தில் ரகசியமாக மின்சிகரெட் புகைத்தால் மற்றவர்களின் கவனத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்ததாக ஒருவர் கூறினார்.

தாம் பயன்படுத்திய மின்சிகரெட்டிலிருந்து வெளியான வெண்புகை காட்டிக் கொடுத்ததால் அவர் பிடிபட்டார்.

2018 முதல் தடைசெய்யப்பட்ட போதிலும், பறிமுதல் செய்யப்பட்ட மின்சிகரெட்டுகளின் எண்ணிக்கையும் அவற்றைப் பயன்படுத்தும்போது பிடிபட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அண்மையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடந்த ஓர் அமலாக்க நடவடிக்கையில், தீவு முழுவதும் உள்ள மதுபானக்கூடங்களிலும் கேடிவி கேளிக்கைக் கூடங்களிலும் அதிகாரிகள் 280க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

ஒட்டுமொத்தமாக, காவல்துறை, சுகாதார அறிவியல் ஆணையம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு உட்பட பிற அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் 640க்கும் மேற்பட்டோரிடம் சோதனை நடத்தினர்.

சோதனை செய்யப்பட்ட 640 பேரில், 17 முதல் 61 வயதுக்குட்பட்ட 115 பேர் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காகப் பிடிபட்டதாக ஆணையம் தெரிவித்தது.

சந்தேகத்திற்கிடமான எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளை வைத்திருந்த ஐந்து பேரும் அவர்களில் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்