சிங்கப்பூரர்களுக்கு அதிக மலிவு உணவுத் தெரிவுகளை வழங்கும் திட்டத்தின்கீழ் ஜூலை 2024 இறுதியில் கிட்டத்தட்ட 180 காப்பிக் கடைகள் கட்டுப்படியாகும் விலையில் உணவுகளை விற்கத் தொடங்கும். இதன்மூலம் பங்கேற்கும் காப்பிக் கடைகளின் எண்ணிக்கை 330 ஆக உயரும்.
கட்டுப்படியாகும் விலை உணவுத் திட்டத்தில் புதிதாக இணைந்துள்ள இக்கடைகள், ஜூலை 1 முதல் சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டை படிப்படியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் (வீவக) தெரிவித்துள்ளன.
அந்த 180 காப்பிக் கடைகளை பாடாலிங், பிராட்வே, டி தியான், சாங் செங், ஃபுட்ஃபேர் கோப்பிதியாம், கிம்லி, கிம் சான் லெங், கௌஃபு, செலக்ட் ஆகிய ஒன்பது தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. அவற்றில் 60 வீவக வாடகை காப்பிக் கடைகள்.
தனியாருக்குச் சொந்தமான காப்பிக் கடைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஜூலை 2024 இறுதிக்குள் கட்டுப்படியாகும் விலையில் உணவை வழங்கும்.
“வீவக குடியிருப்புக்குள் அமைந்துள்ள ஒவ்வொரு 10 காப்பிக் கடைகளிலும், நான்குக்கும் அதிகமானவை கட்டுப்படியாகும் விலையில் உணவு அல்லது பானங்களை வழங்கும்,” என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் திங்கட்கிழமை (ஜூலை 1) தெரிவித்தார்.
தற்போது, தீவு முழுவதும் ஏறக்குறைய 150 வீவக வாடகை காப்பிக் கடைகள் 1,000க்கும் மேற்பட்ட உணவு, பானங்களைக் கட்டுப்படியாகும் விலையில் விற்கின்றன.
கட்டுப்படியாகும் விலையில் விற்கப்படும் உணவுகள் பொதுவாக $3.50 மற்றும் அதற்கும் குறைவான விலையிலும் பானங்கள் $1.20 மற்றும் அதற்கும் குறைவான விலையிலும் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், 2023 மே மாதம் முதல் தங்கள் குத்தகைகளை புதுப்பித்த அனைத்து வீவக வாடகை காப்பிக் கடைகளும் குறைந்தது நான்கு கட்டுப்படியாகும் விலை உணவுகள், இரண்டு பான விருப்பங்களை வழங்க வேண்டும்.
சிங்கப்பூரில் மொத்தம் 776 வீவக காப்பிக் கடைகள் உள்ளன. அவற்றில் 374 கடைகளை வீவக வாடகைக்கு விட்டுள்ளது. 402 கடைகள் தனியாருக்குச் சொந்தமானவை. 2026க்குள் மொத்த 374 வீவக வாடகை காப்பிக் கடைகளும் கட்டுப்படியாகும் விலையில் உணவை வழங்கும் என்று நிறுவனங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
2023ஆம் ஆண்டு மே மாதத்தில் கட்டுப்படியாகும் விலை உணவுத் திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உணவின் அளவு குறைவாக உள்ளது, சத்துணவாக இல்லை அதிக மாவுசத்து, இறைச்சி இல்லாமல் அல்லது குறைவாக இருப்பது போன்ற பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இந்தப் பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சிம் ஆன், “கடை நடத்துநர்கள், கடைக்காரர்களுடன் இக்கருத்துகள் குறித்து பேசியுள்ளோம். அவர்கள் கருத்துகளைக் கேட்டு ஒத்துழைக்கின்றனர். மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன,” என்றார்.
“உணவின் தரத்தை கவனிக்க வீவக அதிகாரிகள் பங்கேற்கும் கடைகளுக்கு வருகை தருகிறார்கள், மேலும் கட்டுப்படியாகும் விலை உணவுத் திட்டத்தில் இணைவதற்கு முன்பு கடைக்காரர்கள், நடத்துநர்களுடன் விரிவான விவாதம் நடைபெறுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் கருத்துகளுக்கான வழிமுறையும் ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

