ஒரே நிறுவனம் நடத்தும் ஆறு பாலர் பள்ளிக் கிளைகளில் 185 பேருக்கு நச்சுணவு பாதிப்பு அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
அந்த 185 பேரில் 173 மாணவர்களும் அடங்குவர். வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) நிலவரப்படி இ-பிரிட்ஜ் (E-Bridge) பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 173 மாணவர்களுக்கும் 12 ஊழியர்களுக்கும் நச்சுணவு பாதிப்புக்குள்ளான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
மிடில்டன் அனைத்துலகப் பள்ளி விநியோகித்த உணவை உட்கொண்டதையடுத்து இந்நிலை உருவானதாக நம்பப்படுகிறது. தொற்றுநோய் அமைப்பு, பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு, சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாணவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. மற்றவர்கள் வெளிநோயாளி சிகிச்சையை நாடினர் அல்லது சொந்தமாக மருந்து எடுத்துக்கொண்டனர் அல்லது சிகிச்சையின்றி குணமடைந்தனர் என்று அம்மூன்று அமைப்புகளும் தெரிவித்தன.
இ-பிரிட்ஜ் @ புக்கிட் பாஞ்சாங், இ-பிரிட்ஜ் @ கான்பெரா, இ-பிரிட்ஜ் @ மொன்ட்ரியால், இ-பிரிட்ஜ் @ உட்லண்ட்ஸ் டிரைவ், இ-பிரிட்ஜ் @ 471B ஈசூன், இ-பிரிட்ஜ் @ 504 ஈசூன் ஆகியவை சம்பந்தப்பட்ட ஆறு பாலர் பள்ளிகள்.
வயிறு, குடல்கள் ஆகியவை வீங்கிப்போகும்போது இரைப்பைக் குடல் அழற்சி ஏற்படும். பிறருடன் உடல் ரீதியாகத் தொடர்பு ஏற்பட்டாலோ மாசடைந்த தண்ணீர், உணவு ஆகியவற்றை உட்கொண்டாலோ ஒருவர் இப்பிரச்சினைக்கு ஆளாகலாம்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிங்கப்பூர் உணவு அமைப்பு, மிடில்டன் அனைத்துலகப் பள்ளியில் உணவுச் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மிடில்டன் அனைத்துலகப் பள்ளி தெம்பனிசில் அமைந்துள்ளது.
அங்கு வேலை செய்யும், உணவைக் கையாளும் பணியாளர்கள், மறுபடியும் அடிப்படை உணவுப் பாதுகாப்புப் பயிற்சியை மேற்கொண்டு அதை வெற்றிகரமாகக் கடக்கவேண்டும் என்றும் உணவில் உருவாகும் கிருமிகள் அவர்கள் உடலில் இல்லை என்பது பரிசோதனைகளின் மூலம் நிரூபிக்கப்படவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட மூன்று அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பின்னரே உணவைக் கையாளும் பணியாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியும்.

