விற்பனைக்காக நாய் வளர்ப்போரில் பலரும் விதிமீறியது கண்டுபிடிப்பு

விற்பனைக்காக நாய் வளர்ப்போரில் பலரும் விதிமீறியது கண்டுபிடிப்பு

2 mins read
e6cb189f-6185-4bc1-b2cd-266bfb5141ef
‘பாவ் பட்டீஸ்’ உட்பட மூன்று நிலையங்களில் மட்டுமே கடுமையாக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் நாய்களை இனப்பெருக்கம் செய்து அதன் குட்டிகளை விற்பனை செய்வதற்கு 22 நிலையங்கள் உரிமம் பெற்றிருந்தன. அவற்றில் 19 நிலையங்கள் புதுப்பிக்கப்பட்ட உரிம விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதாக கடந்த ஆண்டு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

செல்­லப்­ பி­ரா­ணி­கள் நலனை மேம்­ப­டுத்­தும் பொருட்டு அவற்றை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்வோ­ருக்­கான உரி­மம் தொடர்பான விதிமுறைகள் 2022ஆம் ஆண்டு கடுமையாக்கப்பட்டன.

இனப்பெருக்கத்துக்கான ஓய்வு வயதை ஓய்வுவயதை எட்டிய நாய்களுக்குக் கருத்தடை செய்யாதது, நிலையத்தில் பராமரிக்கப்பட்டுவரும் நாய்கள் தொடர்­பாகவும் விற்பனை செய்யப்பட்ட நாய்கள் குறித்தும் முறை­யான தக­வல்­கள் வைத்­தி­ருக்கத் தவறியது, ஒரு நாயின் குறைந்தபட்ச கூண்டு அளவைக் கடைப்பிடிக்காதது ஆகியவை அந்த 19 நிலையங்கள் மீறிய விதிமுறைகளில் அடங்கும்.

விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட 19ல் இரண்டு நிலையங்கள் விலங்குகள், பறவைகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை பரிசீலனையில் உள்ளன என தேசியப் பூங்கா கழகத்தின் விலங்குநல மருத்துவச் சேவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நிலையங்களுக்கு $10,000 வரையிலான அபராதமும் 12 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் மேல் விவரங்கள் வழங்க முடியாது என விலங்குநல மருத்துவச் சேவை தெரிவித்தது.

இருப்பினும், அந்த இரு நிலையங்களில் பல விதிமீறல்கள் இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

வசதி குறைபாடு, சுகாதாரம், நாய்களின் நடமாட்டத்தை அறிவது தொடர்பான உரிம நிபந்தனைகளை மீறியது ஆகியவற்றிற்காக மற்ற 17 நாய் வளர்ப்பு நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என விலங்குநல மருத்துவச் சேவையின் தொழில் தர ஒழுங்குமுறை பிரிவின் குழு இயக்குநர் ஜெசிகா குவொக் கூறினார்.

‘பாவ் படீஸ்’ உட்பட மூன்று நிலையங்களில் மட்டுமே எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் நாய்களை வளர்த்து அவற்றை இனப்பெருக்கம் செய்து அதன் குட்டிகளை விற்பனை செய்வது மிகப் பெரிய வர்த்தகம். முன்பு வெளியான செய்திகளின்படி கடந்த ஆண்டு சிங்கப்பூரில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களின் எண்ணிக்கை 114,000ஆக இருந்தது. 2019ஆம் ஆண்டு பதிவானதோடு ஒப்பிட்டுப் பார்க்குபோது இது கிட்டத்தட்ட 3 விழுக்காடு அதிகம்.

குறிப்புச் சொற்கள்