உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டைப் பகுதியில் விதிமுறைகளுக்கு உட்படாத, துடிப்புடன் நடமாடுவதற்கான சாதனங்களை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் கடை ஒன்றில், திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 23) நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அதேநேரத்தில், ஆணையத்தின் அதிகாரிகளைக் கொண்ட மற்றொரு குழு, அட்மிரால்ட்டி வட்டாரத்தில் உள்ள நடைபாதையில் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களை நிறுத்தி, அவர்களின் சாதனங்களைச் சோதனையிட்டனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நடவடிக்கைகளின் முடிவில், மொத்தம் 19 சட்டவிரோதச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரு இடங்களிலும் சேர்த்து 36 விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விதிமுறைகளுக்குப் புறம்பான மின்சார மிதிவண்டிகள் இதில் அடங்கும். நடைபாதையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பதிவு செய்யப்படாத அல்லது விதிமுறைகளை மீறிய சாதனங்கள் மற்றும் உரிமத் தகடுகள் இல்லாத சாதனங்களை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
சிங்கப்பூரில், துடிப்புடனான நடமாட்டச் சட்டத்தின்கீழ் நிர்வகிக்கப்படும் சாதனங்களில் மின்சார மிதிவண்டிகள், மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் மற்றும் நடக்கச் சிரமப்படுபவர்கள் பயன்படுத்தும் மின்சார சக்கரநாற்காலிகள் போன்ற தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்கள் ஆகியவை அடங்கும்.
திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 23) பறிமுதல் செய்யப்பட்ட 19 சாதனங்களில், ஐந்து சாதனங்கள் ஆணையத்தின் புதிய வேக அளவீட்டுக் கருவியைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டன. தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட இக்கருவி, ஒரு சாதனம் ஓடாமல் ஓரிடத்தில் நிலையாக இருக்கும்போதே அதன் அதிகபட்ச வேகத்தைப் பரிசோதிக்கக்கூடியது.
சிங்கப்பூரில், மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார மிதிவண்டிகளின் வேக வரம்பு மணிக்கு 25 கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல், பொது நடைபாதைகளில் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களின் வேக வரம்பு மணிக்கு 10 கிலோ மீட்டரிலிருந்து 6 கிலோ மீட்டராகக் குறைக்கப்படும்.
2025ஆம் ஆண்டில் விதிமுறைகளுக்கு உட்படாத ஏறத்தாழ 900 சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவை தொடர்பான 900 விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகவும் ஆணையம் தெரிவித்தது. மேலும், சில்லறை விற்பனையாளர்கள் தொடர்பான 90 விதிமீறல்களும் அதே ஆண்டில் கண்டறியப்பட்டன.

