சட்டவிரோதப் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 195 பேர் கைது

சட்டவிரோதப் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 195 பேர் கைது

படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

08 Nov 2026 - 4:08 pm

1 mins read

சிங்கப்பூரில் சட்டவிரோதப் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 195 பேரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 30 வரை தீவு முழுதும் திடீர்ச் சோதனை நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் அத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் 18 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆடவர் எட்டுப் பேரும் 187 பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.

மாதர் சாசனம் 1961, வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டம் 1990, சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2022, தண்டனைச் சட்டம் 1871 ஆகியவற்றின்கீழ் அவர்கள்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கைதானவர்களில் 16 பேர் பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

சோதனையின்போது கைப்பேசிகள், கணினிகள், பாலியல் தொழிலுக்குப் பயன்படும் பொருள்கள், $150,000க்கும் மேற்பட்ட ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், $600,000க்கும் அதிகமான தொகை கொண்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

கைதானவர்களில் ஒருவர் 41 வயது சிங்கப்பூர் ஆடவர். பாலியல் தொழிலுக்கு வசதி செய்து கொடுத்த குற்றத்திற்காக அக்டோபர் 23ஆம் தேதி அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.

சிங்கப்பூருடன் தொடர்புடைய தொலைத்தொடர்புச் சேவைகளைப் பயன்படுத்தி பாலியல் சேவை வழங்குவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை, $100,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பாலியல் தொழிலுக்காகப் பெண்களைத் திரட்டுபவர்களுக்கும் அத்தொழிலின் மூலம் வருவாய் ஈட்டுவோருக்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறையும் $100,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்