கழிக்கப்படாமல் இருந்த மின்னியல் சாலைக் கட்டணங்களில் (இஆர்பி) கிட்டத்தட்ட 19,800 கட்டணங்கள் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து அதிநவீன ஒபியு இயந்திரங்கள் மூலம் செலுத்தப்பட்டுள்ளன.
இஆர்பி ஒபியு இயந்திரத்தின் மூலம் கழிக்கப்படாத இஆர்பி கட்டணங்களைச் செலுத்த வகைசெய்யும் அம்சம் நடப்புக்கு வரும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் முன்னதாக ஆகஸ்ட் 27ஆம் தேதி அறிவித்தது. கழிக்கப்படாமல் இருந்த 40,200 இஆர்பி கட்டணங்களில் கிட்டத்தட்ட பாதிக் கட்டணங்கள் ஒபியு இயந்திரங்களின் மூலம் செலுத்தப்பட்டதாக ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) தெரிவித்தது.
மேலும், கழிக்கப்படாத கட்டணங்களைச் செலுத்த வழங்கப்படும் கூடுதல் ஐந்து நாள்களில், 10ல் எட்டுக் கட்டணங்கள் செலுத்தப்பட்டன. முன்னதாக இந்த விகிதம் 10ல் ஆறாக இருந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து புதிய, பழைய வாகனங்களில் ஒபியு இயந்திரங்களைப் பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போதிலிருந்து வாகன ஓட்டிகளின் தேவைகளுக்கேற்ப நிலப் போக்குவரத்து ஆணையம் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
போக்குவரத்து நிலவரம் குறித்த உடனடித் தகவல்கள், முக்கியக் கட்டடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் காலியாக இருப்பது தொடர்பிலான விவரங்கள், முக்கிய நிகழ்ச்சிகளின்போது சாலை மூடல் குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றைத் தெரியப்படுத்தும் அம்சங்கள் அவற்றில் அடங்கும்.
உச்சநேரமற்ற வேளைகளில் மட்டும் பயன்படுத்தப்படும் கார்களுக்குப் பயன்பாட்டு உரிமக் கட்டணம், நிலவழி எல்லைகளில் சுங்கக் கட்டணம் போன்றவற்றைச் செலுத்துவதற்கான அம்சங்களைச் சேர்க்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
ஒபியு இயந்திரத்தில் நுழைக்கப்படும் கட்டண அட்டையில் போதுமான நிதி இல்லாமேல் போனாலோ அந்த அட்டை இயந்திரத்தில் சரியாக நுழைக்கப்படாமல் அல்லது அறவே இல்லாமல் இருந்தாலோ இஆர்பி கட்டணம் கழிக்கப்படாமல் போகலாம். ஒபியு இயந்திரத்தின் வாயிலாக கழிக்கப்படாத கட்டணங்களைச் செலுத்த வகைசெய்யும் அம்சம் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அறிமுகமானது.
முன்னதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒன்மோட்டோரிங் இணையத்தளம், ஏஎக்ஸ்எஸ் தளம் ஆகியவற்றின் மூலம் கழிக்கப்படாத இஆர்பி கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது. இப்போது ஒபியு முறையின் மூலமும் அவ்வாறு செய்யலாம்.