சிங்கப்பூரில் குறைந்த வருமானம் பெறும் ஏறத்தாழ 5,600 முஸ்லிம் குடும்பங்களுக்கு அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கக் கூடுதலாக $2.2 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவின ஆதரவு எனப்படும் ‘ஒருமுறை மட்டும் வழங்கப்படும்’ சிறப்பு நிதியுதவியாக, ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் $120 தொகையைப் பெற்றுக்கொண்டதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) வெளியிட்ட அறிக்கையில் அது குறிப்பிட்டது.
தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் கூடுதல் தேவையுள்ளோருக்குக் கூடுதல் தொகை வழங்கப்பட்டது.
ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்படும் இந்தத் தொகை, முயிஸ் மாதாந்தர ஜகாத் நிதி உதவி, அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவின ஆதரவு நடவடிக்கைகளுக்குத் துணையாக அமைகிறது.
சிங்கப்பூரில் குறைந்த வருமானம் ஈட்டும் ஏழு விழுக்காட்டுச் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் இந்த மாதாந்தர உதவி கிடைக்கிறது.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது, சில குடும்பங்களுக்கு அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பது கவலையாக உள்ளது என்றும் இத்தகைய கூடுதல் ஆதரவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தமது ஃபேஸ்புக் காணொளியில் குறிப்பிட்டார்.
மேலும், ஜகாத் வழங்கியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில், 8 பிரிவுகளின்கீழ் தகுதிபெறும் பயனாளர்க்கு $74.7 மில்லியன் ஜகாத் நிதி வழங்கப்பட்டது.
அதில் 40 விழுக்காட்டுக்கும் மேலான தொகை நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டது.
