சிங்கப்பூரின் தொழில்நிறுவனச் சூழலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய நிறுவனங்களுக்கும் அதிவேக வளர்ச்சி காணும் நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்க $2.5 பில்லியன் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த முன்னெடுப்பின் மூலம் நிறுவனங்களுக்கான மூலதன ஆதரவும் இடவசதிகளும் கணிசமாக விரிவுபடுத்தப்படும்.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 2) வர்த்தக, தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், ‘ஸ்டார்ட்அப் எஸ்ஜி ஈக்விட்டி’ (Startup SG Equity) இணை முதலீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த கூடுதல் $1 பில்லியன் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிதி, புதிய நிறுவனங்களில் தொடர்ச்சியான முதலீட்டை உறுதிப்படுத்துவதுடன், ‘டீப் டெக்’ எனப்படும் நவீன தொழில்நுட்பத் துறையில் இயங்கும் வளர்ந்துவரும் நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இந்த விரிவாக்கத்தின் கீழ், ‘நியூவோகோர்’ (Nuevocor) போன்ற உயிர்தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், புதிய சந்தைகளில் கால்பதிக்கவும் நேரடி முதலீடு செய்யப்படும். மேலும், உலகளாவிய வளர்ச்சி நிலை ஆழ்நிலைத் தொழில்நுட்பத் துணிகர மூலதன நிதிகளை ஈர்க்கும் நோக்கில், ‘ஸ்டார்ட்அப் எஸ்ஜி ஈக்விட்டி’ திட்டம் அனைத்துலக ‘வெஞ்சர் கேபிடல்’ (Venture Capital) நிதிகளிலும் முதலீடு செய்யும்.
தெமாசெக் நிறுவனத்துடன் இணைந்து $1.5 பில்லியன் மதிப்பில் இரண்டாவது ‘ஆங்கர் ஃபண்ட்’ (Anchor Fund 2) தொடங்கப்பட்டுள்ளது. அதிவேக வளர்ச்சி காணும் நிறுவனங்களை சிங்கப்பூருக்கு ஈர்த்து, அவற்றை இங்கு நிலைநிறுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
உள்கட்டமைப்பு மேம்பாடுகள்
இந்த நிதி முன்னெடுப்புகளுக்குத் துணைபுரியும் வகையில், புதிய நிறுவனங்களுக்கு ஏற்ற சூழலையும் உள்கட்டமைப்பையும் மேம்படுத்துவது குறித்து வர்த்தக, தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் விளக்கினார்.
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் புதிய ‘லாஞ்ச்பேட்’ (LaunchPad) தளம் ஒன்றை ஜேடிசி நிறுவனம் அமைத்து வருகிறது. அது இவ்வாண்டு இறுதிமுதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும். அங்கு யுஓபி, ஓசிபிசி, அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (GovTech), சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு (CSA), சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை அமைந்திருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
அதுமட்டுமல்லாமல், ஒன்-நார்த் பகுதியில் அமைந்துள்ள ‘லாஞ்ச்பேட்’ தளத்தையும் ஜேடிசி நிறுவனம் விரிவுபடுத்திப் புதுப்பிக்கும். இந்தப் புதுப்பிப்பின் ஒரு முக்கிய அம்சம் ‘கம்போங் ஏஐ’ எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவுப் பூங்காவாகும்.
இது 2028ல் தயாராகும்போது, செயற்கை நுண்ணறிவுக்கான சிங்கப்பூரின் மையமாகவும் இல்லமாகவும் விளங்கும். ஒரே கூரையின்கீழ் வேலை செய்யும் இடங்களையும் வசிக்கும் இடங்களையும் கொண்ட சிங்கப்பூரின் முதல் புதிய தொழில்நிறுவனச் சமூகமாக அது திகழும்.
புதிய வர்த்தகப் புதுப்பிப்புத் தொகுப்புத் திட்டம்
புதிய வர்த்தகப் புதுப்பிப்புத் தொகுப்புத் திட்டம் (Business Refresh Package) ஒன்றை வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இது தொழில்நிறுவனங்களுக்கு ஆற்றலளிக்கவும், வசதிகளை ஏற்படுத்தித் தரவும், அதிகாரமளிக்கவும் வடிவமைக்கப்பட்ட தற்போதைய திட்டங்களில், தொடர்ச்சியான மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. உற்பத்தி ஆற்றலையும் செலவுச் சிக்கனத்தையும் மேம்படுத்துதல், வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருவாயைப் பெருக்குதல், தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவான சூழலை அமைத்துத் தருதல் ஆகிய மூன்று முக்கியக் கூறுகளில் இந்தத் தொகுப்புத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
இதன் முக்கிய நடவடிக்கைகளாக, ‘இஎஃப்எஸ்’ எனப்படும் நிறுவன நிதியுதவி - பசுமைத் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கும், எரிசக்தி சிக்கனத்திறன் மானியம் திட்டம் ஓராண்டுக்கும் நீட்டிக்கப்படும்.
அத்துடன் சந்தை ஆயத்தநிலை உதவி மானியம் போன்ற அனைத்துலகமயமாக்கல் மானியங்களுக்கான ஆதரவு நிலைகள் அதிகரிக்கப்படும்.
மேலும், குறிப்பிட்ட அரசாங்க மானியங்களை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் ‘எட்ஜ்’ எனப்படும் புதிய மானியத் திட்டம் 2026ஆம் ஆண்டின் பிற்பாதியில் அறிமுகப்படுத்தப்படும்.
இதுதவிர, சிறிய தொழில்துறைத் தளங்களுக்கான ஒதுக்கீட்டு மதிப்பீட்டு செயல்முறை எளிதாக்கப்பட்டு, அதன் பரிசீலனை நேரம் ஒரு மாதத்திற்குள் குறைக்கப்படும்.

