2.7 ஹெக்டர் சின் மிங் நிலப்பரப்பில் புதிய வீடுகள்

2 mins read
19bfe2ec-f897-45b8-b4a9-757b42fc25ec
சின் மிங் ரோட்டுக்கும் மேரிமவுண்ட் ரோட்டுக்கும் இடைப்பட்ட புதிய வீடமைப்புத் தளம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சின் மிங் வட்டாரத்தில் உள்ள 2.7 ஹெக்டர் நிலப்பரப்பு புதிய வீடமைப்பு மேம்பாட்டுக்காகத் தயார் செய்யப்படுகிறது.

அதன் மொத்த பரப்பளவு ஏறத்தாழ மூன்றரை காற்பந்துத் திடலுக்குச் சமம். அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளைக் கட்டலாம் என சொத்துச் சந்தைப் பகுப்பாய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அந்தக் குடியிருப்பு மேம்பாட்டை உள்ளடக்கும் வகையில் ‘பெருந்திட்டம் 2019’ல் திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

நகர மறுசீரமைப்பு ஆணையம் அந்த உத்தேசத் திருத்தங்களை திங்கட்கிழமை (நவம்பர் 11) வெளியிட்டது.

சிங்கப்பூரின் வருங்கால நில மேம்பாட்டுக்கான திட்டங்களை அந்தப் பெருந்திட்டம் கொண்டுள்ளது.

2023 டிசம்பரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தொடங்கிய ‘சின் மிங் ரெசிடென்சஸ் பிடிஓ’ திட்டத்திற்கான நிலப் பகுதியில் இருந்து சில மீட்டர் தொலைவில் அந்தப் புதிய 2.7 ஹெக்டர் நிலப்பரப்பு உள்ளது.

தற்போது காலிமனையாக உள்ள அந்த இடத்தில் இதற்கு முன்னர் இருந்த வீவக தொழிற்பேட்டைக் கட்டடங்கள் அண்மைய ஆண்டுகளில் இடிக்கப்பட்டுவிட்டன.

அந்தக் காலிமனையில் 800 முதல் 900 வரையிலான வீவக வீடுகளை அல்லது கிட்டத்தட்ட 1,200 தனியார் கொண்டோமினிய வீடுகளைக் கட்ட முடியும் என்று பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.

பொது வீடமைப்புக்கான தேவை அந்த வட்டாரத்தில் உள்ளதால் தனியார் வீடுகளைக் காட்டிலும் வீவக வீடுகளே அந்த நிலப்பரப்பில் கட்டப்படக்கூடும் என்று Mogul.sg சொத்துத் தேடல் இணைய நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சி அலுவலர் நிக்கலஸ் மாக் தெரிவித்து உள்ளார்.

2023 டிசம்பரில் தொடங்கப்பட்ட பிடிஓ திட்டத்திற்கு அதிக வரவேற்பு இருந்ததை அதற்கு அவர் உதாரணமாகச் சுட்டினார்.

அந்த பிடிஓ திட்டத்தில் 627 நாலறை வீடுகளுக்கு 2,293 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதேபோல 105 மூவறை வீடுகளுக்கு 177 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

1988ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த வட்டாரத்தில் கட்டப்பட இருக்கும் புதிய வீவக வீடுகள் என்பதால் அவற்றின்மீது பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

குறிப்புச் சொற்கள்