சிங்கப்பூர் கடல் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு காரணமாக ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.
தற்போது அங்கிருக்கும் B, E ஆகிய இரு பகுதிகளில் எண்ணெய்க்கசிவை அகற்றும் பணி நிறைவடைந்ததால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகத் திங்கட்கிழமையன்று (ஜூலை 22) தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
கயாக் படகோட்டம் (kayaking) போன்ற நீர் விளையாட்டுகளை அப்பகுதிகளில் மேற்கொள்ளலாம் என்று வாரியம் கூறியது. இருப்பினும், நீச்சல் போன்ற கடல் நீருடன் நேரடித் தொடர்புகொண்ட விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் எனப் பொதுமக்களை அமைப்பு கேட்டுகொண்டது.
கடல்நீரின் தரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் எனவும் நீரின் தரம் இயல்புநிலைக்குத் திரும்பும்போது அனைத்து நீர் விளையாட்டுகளிலும் ஈடுபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அமைப்பு சொன்னது.