2020ஆம் ஆண்டில் கொவிட்-19 பெருந்தொற்றின்போது அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க மானியத் திட்டம் மூலம், சிங்கப்பூரின் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) தங்களுக்கு $30,000க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்காக இரண்டு பேர் கூட்டு சேர்ந்து ஏமாற்றினர் என்று கூறப்படுகிறது.
அவர்களில் ஒருவரான 30 வயது ஷோன் டான் ஸெங் வீ, இன்செக்ட் ஃபீட் டெக்னாலஜிஸ் எனும் உயிர்தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர். அவர் மீது ஜூலை 30ஆம் தேதியன்று, 13 ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவரது ஏமாற்றுக் குற்றங்களுக்குத் துணை போனதாகக் கூறப்படும் 59 வயது ஆல்வின் யாப் ஆ செங் பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். அந்த நிறுவனங்களில் ஒன்று சியான் ஹு மீன் பண்ணை நிறுவனமும் ஒன்று. ஆல்வின் மீது பத்து ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
யாப்பின் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் டானின் பெரும்பாலான குற்றச்சாட்டுகளும் இன்செக்ட் ஃபீட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவை.
ஜூன் 10, 2020 அன்று, பெருந்தொற்றின்போது, உள்ளூர் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள முதலாளிகளுக்கு ஊதிய ஆதரவை வழங்கிய வேலை ஆதரவுத் திட்டத்தின் (Jobs Support Scheme) கீழ் மானியங்களை வழங்குவதற்காக ஐராஸை ஏமாற்ற அவர்கள் முயன்றதாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை ஜூலை 29ஆம் தேதி தெரிவித்தது.
வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், ஒவ்வோர் உள்ளூர் ஊழியருக்கும் வழங்கப்படும் மொத்த மாதாந்தர ஊதியத்தில் 25 முதல் 75 விழுக்காடு வரை ரொக்க மானியம் மூலம் அரசாங்கம் இணைந்து நிதியாதரவு அளித்தது.
“இன்செக்ட் ஃபீட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு மே 2020ல் முழுச் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறி, யாப்பின் உதவியுடன் ஐராசை ஏமாற்றி பணத்தைப் பெற டான் முயன்றதாகக் கூறப்படுகிறது,” என்று காவல்துறை கூறியது.
மற்றொரு சம்பவத்தில் டான், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பை (EnterpriseSG) ஏமாற்றி, அதனிடமிருந்து மொத்தம் $33,000க்கு மேல் பணம் பெற்றுக்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். இதன் தொடர்பில் சான் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
டான் மற்றும் யாப் தொடர்பான வழக்குகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வோர் ஏமாற்றுக் குற்றச்சாட்டுக்கும், குற்றவாளிக்கு பத்து ஆண்டுகள் வரையிலான சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

