உட்லண்ட்ஸ் குடிநுழைவு சோதனைச் சாவடியில் சண்டையிட்ட சந்தேகத்தில் இரண்டு ஆடவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.
விசாரணையில் உள்ள ஆடவர்களின் வயது 32 மற்றும் 47. இருவரும் தலைக்கவசம் கொண்டு தங்களைத் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு ஆடவர்களும் புதன்கிழமை மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் போது தடுத்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஆடவர்களின் அடையாளங்களைக் கண்டுபிடிக்க குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் உதவியதாகக் காவல்துறை கூறியது.
ஆடவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏப்ரல் 28ஆம் தேதி சண்டை நடந்ததாக நம்பப்படுகிறது. ஆடவர்கள் அடித்துக்கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களிலும் பரவியது.
ஆடவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஓர் ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது 5,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.