சேவைகளைப் பெறுவதற்காக முன்பணம் செலுத்தி, பின்னர் அவற்றைப் பெறாத வகையில் 2024ஆம் ஆண்டில் மட்டும் வாடிக்கையாளர்கள் $1.93 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்தனர்.
இத்தொகை கடந்த 2023ஆம் ஆண்டைக்காட்டிலும் நான்கு மடங்கிற்கும் அதிகம் என்று ‘கேஸ்’ எனப்படும் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 6) தெரிவித்தது.
பயனீட்டாளர்கள் பணம் செலுத்திய பிறகு நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதும் பதிலளிக்காமல் பொறுப்பற்று நடந்துகொண்டதுமே இதற்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
ஆக அதிகமாக, கட்டடப் புதுப்பிப்புத் துறையில் மட்டும் இவ்வகையில் ஏறக்குறைய $728,000 பணம் பறிபோனது. அத்தகைய சம்பவங்களில், புதுப்பிப்புப் பணிகளின்போது புதுப்பிப்பு ஒப்பந்ததாரர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதால், பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்கள் பணிகளை முடிக்க வேறு ஒப்பந்ததாரர்களை நாட வேண்டியதாயிற்று.
புதுப்பிப்பு ஒப்பந்ததாரர்கள்மீது மட்டும் 962 புகார்கள் வந்தன. அவற்றுள் 97 விழுக்காடு, கேஸ்டிரஸ்ட் அங்கீகாரம் பெறாத ஒப்பந்ததாரர்கள் தொடர்பானவை என்றும் அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் தொடர்பில் புகார்களில் முடிவு எட்டப்பட்டன என்றும் கேஸ் தெரிவித்தது.
கேஸ் அமைப்பிடமிருந்து அங்கீகாரம் பெற்ற வகையில், தற்போது 140க்கும் மேற்பட்ட புதுப்பிப்பு ஒப்பந்ததாரர்கள் உள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக, திருமணச் சேவைத் துறையில் கிட்டத்தட்ட $284,000 பணத்தைப் பயனீட்டாளர்கள் இழந்தனர். சிட்டி கேட்டில் அமைந்திருந்த லவ் நெஸ்ட் நிறுவனமும் அதனுடன் இணைத்துச் சொல்லப்பட்ட வேறு இரு நிறுவனங்களும் திடீரென மூடப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், முன்பணம் செலுத்திய வகையிலான இழப்பு அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்று பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதனையடுத்து, “கேஸ்டிரஸ்ட் அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரர்களையே நாடும்படி பயனீட்டாளர்களை அறிவுறுத்துகிறோம்,” என்று திரு யோங் கூறினார்.
துறைசார்ந்த புகார்களைப் பொறுத்தமட்டில், 2023ஆம் ஆண்டைப் போலவே 2024ஆம் ஆண்டிலும் மோட்டார்வாகனத் தொழில்துறை மீதே அதிகமான புகார்கள் வந்துள்ளன. சென்ற ஆண்டு அத்துறைமீது 1,306 புகார்கள் அளிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஒப்பனை, புதுப்பிப்பு, பொழுதுபோக்கு ஆகிய துறைகள்மீது அதிக புகார்கள் வந்தன.