பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) நிலையங்களில் உள்ள பொது இடங்களில் சிறுநீர் கழித்ததாக மேலும் இரு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தில் சிறுநீர் கழித்ததற்காக செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 14) ஆடவர் ஒருவருக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு மறுநாளான புதன்கிழமையன்று (ஜனவரி 15) மேலும் இரு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பொத்தோங் பாசிர் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 13) இரவு 7.30 மணியளவில் பயணிகள் சேவை நிலையத்துக்கு முன்னால் சிறுநீர் கழித்ததாக புதன்கிழமையன்று சுவோ ஹோங்வெய் எனும் 57 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதேபோல் இம்மாதம் எட்டாம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் தானா மேரா நிலையத்தில் ரயில் மேடையில் சிறுநீர் கழித்ததாக 53 வயது சூ ஃபூக் கான் என்பவர் மீதும் புதன்கிழமையன்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இருவரும் சிங்கப்பூரர்கள்.
இச்செயல் பொதுமக்களை எரிச்சல்படுத்தும் என்று தெரிந்தே சுவோ அதில் ஈடுபட்டதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
சூ, மருத்துவப் பரிசோதனைக்காக மனநலகக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரின் வழக்கு விசாரணை இம்மாதம் 28ஆம் தேதி மீண்டும் தொடங்கும்.