வயிற்றுக் கோளாற்றால் பிள்ளைகள் பாதிப்பு

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2 பாலர் பள்ளி பிள்ளைகள்

1 mins read
94de5b40-904e-45d6-b1a5-0f53cb159a03
பொங்கோலில் உள்ள மல்பரி பாலர் பள்ளியில் 18 பேருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது. - படம்: மல்பரிபொங்கோல்/ இன்ஸ்டகிராம்

பொங்கோலில் உள்ள ஒரு பாலர் பள்ளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் வயிற்றுக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளிடையே ஏற்பட்ட அந்தத் தொற்று குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளில் ஒன்று வீடு திரும்பியுள்ளதாகத் தொற்றுநோய் அமைப்பு, பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ), சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவை தெரிவித்தன.

நார்த்‌ஷோர் பிளாஸா கடைத்தொகுதியில் உள்ள மல்பரி லர்னிங் நிறுவனத்தின் பொங்கோல் நிலையத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி 18 பேர் வயிற்றுக் கோளாற்றால் பாதிக்கப்பட்டதாக அமைப்புகள் கூறின.

வயிற்றுக் கோளாற்றுக்கு ஆளானோரில் 17 பேர் பாலர்ப் பள்ளி பிள்ளைகள், ஒருவர் நிலையத்தின் ஊழியர்.

செப்டம்பர் 2ஆம் தேதி நிலவரப்படி 14 பிள்ளைகளும் ஊழியரும் குணமடைந்துவிட்டனர்.

வயிற்றுக் கோளாற்றால் வயிறு வலியும் வாந்தியும் ஏற்படுவது வழக்கம்.

நிலைமையைக் கண்காணிப்பதாகக் கூறிய இசிடிஏ, பாலர்ப் பள்ளி உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியது.

பாலர் பள்ளிகளில் நல்ல உணவு பாதுகாப்பை வலியுறுத்த இசிடிஏ அமைப்புடன் சிங்கப்பூர் உணவு அமைப்பு இணைந்து செயலாற்றுகிறது.

குறிப்புச் சொற்கள்