காமன்வெல்த்தில் இருக்கும் சாலைச் சந்திப்பு ஒன்றில் பாதசாரிகள்மீது மின் ஆற்றலில் இயங்கும் சைக்கிள் மோதியது.
இந்த விபத்து காமன்வெல்த் அவென்யூ வெஸ்டில் இருந்து காமன்வெல்த் அவென்யூ நோக்கிச் செல்லும் சாலைச் சந்திப்பில் வியாழக்கிழமையன்று (ஜூலை 11) இரவு 7.25 மணிக்கு நடந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்
பாதசாரிகள்மீது மோதிவிட்டு அந்த மின் சைக்கிள் நிற்காமல் சென்றதாகக் கூறப்பட்டது.
31, 33 ஆகிய வயதுடைய இரு பெண் பாதசாரிகள் காயமடைந்ததாகவும் அவர்கள் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
காயமடைந்த பாதசாரிகளில் ஒருவர் சக்கர நாற்காலியில் பயணித்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்துச் சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும்போது மின் சைக்கிள் ஒன்று சாலைச் சந்திப்பைக் கடப்பதையும் சிறிது நேரத்தில் அந்தச் சாலையைக் கடந்த பாதசாரிகள்மீது அது மோதியதையும் எஸ்ஜி ரோடு விஜிலாண்டே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்த காணொளியில் காண முடிந்தது.
அந்தச் சாலை வழியே சென்றவர்களும் மற்ற பாதசாரிகளும் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதையும் அந்தக் காணொளியில் பார்க்க முடிந்தது.
விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்துக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

