தாயாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனுக்கு நன்னடத்தை கண்காணிப்பு

தாயாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனுக்கு நன்னடத்தை கண்காணிப்பு

படம்: பிக்சாபே

05 Feb 2024 - 5:22 pm

1 mins read

சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டில் தன்னுடைய தாயாரைப் பலமுறை அடித்த 16 வயது சிறுவனுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இரண்டு ஆண்டுகள் நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தாயாருக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. மகனின் துன்புறுத்தலை அமைதியாகத் தாங்கிக்கொண்டார் அவர். மனைவி தாக்கப்பட்டதைக் கண்ட கணவர் அதில் தலையிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சம்பவங்கள் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடையே நடந்தன.

ஒருமுறை அந்தச் சிறுவன் தாயாரைச் சமையலறைக்குள் இழுத்துச்சென்று, வெட்டுக்கத்தி ஒன்றை வைத்து அவரைக் கொல்லப்போவதாக மிரட்டினார்.

அவன் பிரச்சினையில் சிக்கிவிடுவான் என்று சிறுவனின் சகோதரர் அவனிடம் கூறினார். அதோடு வெட்டுக்கத்தியை வேறு இடத்தில் வைக்கும்படியும் சகோதரர் அவனுக்கு ஆலோசனை வழங்கினார்.

குடும்பத்தின் அடையாளங்களைப் பாதுகாக்க, தற்போது 17 வயதாகும் அந்தச் சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை.

அவன் சென்ற ஆண்டு ஜூன் மாதம் காயம் ஏற்படுத்தியதற்காக இரண்டு குற்றச்சாட்டுகளையும் மிரட்டல் விடுத்ததற்காக மற்றொரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டான். மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

தண்டனையின் ஒரு பகுதியாக, அந்தச் சிறுவன் 100 மணிநேர சமூக சேவை செய்ய வேண்டும். அதோடு அவன் ஓராண்டுக்கு சிங்கப்பூர் சிறுவர் விடுதியில் தங்கவேண்டும்.

குறிப்புச் சொற்கள்