மனித மூலதனம், நிர்வாக மேம்பாடு போன்ற துறைகளில் அடுத்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 புதிய திட்டங்களை சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் செயல்படுத்தும்

வணிகச் சங்கம், தொழிற்சபைகளின் மேம்பாட்டுக்கு 20 அம்ச பெருந்திட்டம்

2 mins read
814e85c6-f5d8-4eaf-9078-0b74713d319b
வணிகச் சங்கங்கள், தொழிற்சபைகளின் முதல் உச்சநிலைக் கூட்டத்தில் பெருந்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங்.  - படம்: சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம்

மாறிவரும் வணிகச் சூழலில், சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குச் சிறந்த சேவை வழங்க வணிகச் சங்கங்களும் தொழிற்சபைகளும் தங்களை உருமாற்றிக்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் புதன்கிழமை (ஜனவரி 22) தெரிவித்தது.

வணிகச் சங்கங்கள், தொழிற்சபைகளின் ஆற்றலை மேம்படுத்த, சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் பெருந்திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 புதிய திட்டங்கள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.

புதிய திட்டங்கள், வணிகச் சங்கங்கள், தொழிற்சபைகளின் துறையின் மதிப்பை வலுப்படுத்துதல்; மனித மூலதன மேம்பாடு; நிர்வாகத் தர மேம்பாடு; செயல்பாட்டு உன்னத மேம்பாடு ஆகிய நான்கு முக்கிய உத்திகளின் கீழ் வருகின்றன.

இவை தலைமைத்துவப் பயிற்சி, தொழில்முறை சான்றிதழ் திட்டங்கள் முதல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆலோசனை சேவைகள் வரை அடங்கும்.

மேலும், பின்பற்றுவதற்கான சிறந்த நடைமுறைகளைக் கொண்ட வழிகாட்டிகள்; வணிகச் சங்கங்கள், தொழிற்சபைகளுக்கு இடையே கட்டமைப்பு போன்றவை ஏற்படுத்தப்படுவதுடன் மின்னிலக்கமயமாதல் தொடர்பில் நடப்பில் உள்ள திட்டங்களும் மேம்படுத்தப்படும்.

தலைமை வணிக சபையாக, சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் சிங்கப்பூரில் 300க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளிநாட்டு வணிகச் சங்கங்கள், தொழிற்சபைகளின் நலன்களைப் பேணுகிறது.

2024ஆம் ஆண்டு 42 வணிகச் சங்கங்கள், தொழிற்சபைகளின் 68 தலைவர்கள், செயலாளர்கள் தொழில் சம்மேளனத்தின் நிலைகுறித்து ஆராய்ந்த பின்னர் இப்பெருந்திட்டம் குறித்த யோசனை எழுந்தது. என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆதரவுடன் 40க்கும் மேற்பட்ட வணிக சங்கங்கள், தொழிற்சபைகளுடன் இணைந்து திட்டம் உருவாக்கப்பட்டது.

சிங்கப்பூரின் துடிப்புக்கும், ஒருங்கிணைப்புக்கும் வணிகச் சங்கங்கள், தொழிற்சபைகள் முக்கிய பங்கு வகிப்பதாக புதன்கிழமை நடைபெற்ற வணிகச் சங்கங்கள், தொழிற்சபைகளின் முதல் உச்சநிலைக் கூட்டத்தில் பெருந்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் கூறினார்.

அதிகரித்துவரும் சிக்கலான உலகளாவிய நிலப்பரப்பில் இப்பெருந்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், புவிசார் அரசியல் மாற்றங்கள், விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள், நீடித்த நிலைத்தன்மைக்கான தேவைகள் ஆகியவை, தொழில்களின் செயல்பாட்டை மறுவடிவமைக்கின்றன என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்