தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உட்லண்ட்சில் உள்ள புதிய விஇபி தகவல் முகப்பில் திரண்ட 200 ஓட்டுநர்கள்

3 mins read
c4009300-ca14-4156-bfff-46bc46f5c1e7
பிற்பகல் 2 மணிக்குள் விஇபி தகவல் நிலையத்தில் 200 பேர் கூடி விட்டனர்.  - படம் சாவ் பாவ்

தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஜாக்சன் டான், ஜூலை 8ஆம் தேதி மலேசியாவிற்குச் செல்ல வாகன நுழைவு அனுமதிக்கு (விஇபி) விண்ணப்பித்தார். ஆனால் அதை அக்டோபரில் பெற்றுக்கொள்ளும்படி ஆகஸ்ட் 19ஆம் தேதிதான் தெரிவிக்கப்பட்டது.

அவரது விண்ணப்பத்தில் வாகனத்தின் குறிப்பு அட்டையின் நகல் இணைக்கப்படவில்லை. அதை அவர் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘ஒன்மோட்டோரிங்’ இணையத் தளத்தில் பெற்றிருக்கலாம்.

விண்ணப்பத்தில் அவர் செய்த தவற்றைப் பற்றி உட்லண்ட்ஸ் தொழிற்பூங்கா E5, மூன்றாவது மாடியில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் விஇபி தகவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 19 அன்று காலை 11.25 மணிக்கு தகவல் நிலையம் முதல் முறையாகத் திறக்கப்பட்டபோது, 55 வயதான திரு டான் முதல் வாடிக்கையாளராக அங்கு சென்றார். அந்த நிலையத்தில் இரண்டு அதிகாரிகளும் மூன்று தொழில்நுட்ப ஆதரவு ஊழியர்களும் உள்ளனர்.

பிற்பகல் 2 மணிக்குள் அங்கு 200 பேர் கூடிவிட்டனர்.

அக்டோபர் 1ஆம் தேதி முதல், சிங்கப்பூரிலிருந்து தரை வழியாக மலேசியாவுக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டு வாகனங்களும் வாகன நுழைவு அனுமதி அட்டையைப் (விஇபி) பயன்படுத்த வேண்டும்.

இது மலேசியாவில் வெளிநாட்டு வாகனங்களுக்கான ‘அடையாள அட்டை’ போல் செயல்படுகிறது. மேலும் அழைப்பாணைகள், குற்றங்கள் உட்பட அவர்களின் போக்குவரத்துப் பதிவுகளை அதிகாரிகள் கண்காணிக்க இது வகை செய்யும்.

ஜோகூர் கடற்பாலம் வழியாக, சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் உள்ள ஜோகூர் சோதனைச் சாவடி மற்றும் துவாஸ் இரண்டாவது பாலம் வழியாக, சுல்தான் அபு பக்கர் வளாகத்தில் உள்ள சோதனைச் சாவடிக்குள் நுழையும் வாகன ஓட்டிகளுக்கு இது பொருந்தும்.

செல்லுபடியாகும் விஇபி அட்டை இல்லாத வாகன ஓட்டிகளுக்கு ஜோகூரில் நுழைய அனுமதி மறுக்கப்படும் அல்லது 2,000 ரிங்கிட் (S$598) வரை அபராதம் விதிக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

மற்ற விஇபி முகப்பு ஜோகூர் பாருவில் உள்ள டாங்கா பேயில் இருந்ததால், சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு இந்தத் தகவல் நிலையம் பயனுள்ளதாக அமையும் என்று திரு டான் கூறினார்.

இணையம் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை சிங்கப்பூரர்களுக்கு வழிகாட்டுவதை இந்த முகப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

வாகன ஓட்டிகள் தங்கள் விஇபி அதிர்வெண் அடையாள (RFID) அட்டையை இந்த நிலையத்தில் பொருத்திக்கொள்ளவோ பெற்றுக்கொள்ளவோ முடியாது.

“டாங்கா பே நிலையத்திற்கு வந்த சிங்கப்பூரர்கள் தெரிவித்த கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, ஜோகூருக்குப் பயணம் செய்வதைத் தவிர்ப்பதற்கு இங்கேயும் இதேபோன்ற அலுவலகம் இருக்க வேண்டும் எனும் முடிவெடுக்கப்பட்டு உட்லண்ட்ஸ் அலுவலகம் நிறுவப்பட்டது என்றார் ‘மை விஇபி’ நிலையத்தின் தற்காலிக மேலாளர் திரு இங் போ ஹெங்.

உட்லண்ட்ஸ் விஇபி நிலையம் ஏற்கெனவே விஇபி விண்ணப்பங்களை வைத்திருக்கும் ஓட்டுநர்கள் அல்லது வெற்றிகரமாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள், தேவைகளைப் பற்றி மேலும் அறிய விரும்புபவர்களுக்கு உதவுகிறது.

மேலும் வாகன ஓட்டிகளுக்கு உதவவும், வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவும் இந்த நிலையமானது திட்டமிடலை மேம்படுத்தும் வகையில், தகவல் நிலையம் அடுத்த வாரத்தில் இணைய வழி சந்திப்புக்கான காலப் பதிவு முறையை செயல்படுத்தும் என்றும் திரு இங் கூறினார்.

உட்லண்ட்ஸ் விஇபி தகவல் நிலையம் வார நாள்களில் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

குறிப்புச் சொற்கள்