தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிம் மோ வீட்டில் தீ; 200 பேர் வெளியேற்றம்

2 mins read
6eb5cf60-e842-47a9-b2c8-457dbe4edd20
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 200 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். - படம்: கிறிஸ்டஃபர் டிசூசா ஃபேஸ்புக்

டிசம்பர் 11ஆம் தேதி அதிகாலையில் குவீன்ஸ்டவுனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னிரவு 12.35 மணியளவில் புளாக் 3, கிம் மோ ரோட்டில் உள்ள ஒன்பதாவது மாடியில் தீச் சம்பவம் ஏற்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இந்தத் தீயால், அவ்வீட்டின் வரவேற்பறையில் உள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தீக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

டிசம்பர் 11 அன்று, ஹாலந்து - புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டஃபர் டிசூசா, தீ விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டதாகவும், விசாரணையின் கண்டுபிடிப்புகள் குறித்து தமக்கு விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் கேட்டுக்கொண்டதாகவும் தமது ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.

“இதற்கிடையே, தேவைப்பட்டால் இடைக்கால வீடுகளை வழங்குதல் உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தத் தீச் சம்பவம் ஏற்படுத்திய சேதத்தின் அளவு குறித்து தகவல் இல்லை.

நள்ளிரவைக் கடந்த சிறிது நேரத்தில் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், உடனடியாகத் தனது நாய் மற்றும் வீட்டுப் பணிப்பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் 30 வயதான சஃபியர் இங் கூறினார்.

சில குடியிருப்பாளர்கள் நெருப்பைப் பற்றி எச்சரிப்பதற்காக அண்டை வீடுகளின் முன்கதவுகளைத் தட்டினர். வயதானவர்களை வெளியேற்றவும் அவர்கள் உதவினர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துக்கொண்டிருக்கும் வேளையில், குடியிருப்பாளர்கள் அருகில் உள்ள கூடாரத்தில் காத்திருந்தனர்.

வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் வீட்டுக்குத் திரும்புவதை உறுதிசெய்வதற்காக அவர்கள் காலை 4 மணியளவில் எண்ணப்பட்டவுடன் அவர்கள் வீடு திரும்ப காவல்துறை அதிகாரிகள் உதவினர் என்று அந்த புளோக்கின் தரைத்தளத்தில் உள்ள லுனாவே செல்லப்பிராணிகள் கடையின் சந்தைப்படுத்தல் இயக்குநர் திருவாட்டி இங் மேலும் கூறினார்.

“தீயணைப்பு வீரர்கள் சோர்வாகக் காணப்பட்டனர். இருப்பினும், அவர்கள் காலை 8 மணி வரை சம்பவ இடத்திலேயே இருந்து அனைத்தும் வழக்கநிலைக்குத் திரும்பி விட்டதை உறுதிசெய்த பிறகே அங்கிருந்து புறப்பட்டனர்,” என்றார் திருவாட்டி இங்.

இச்சம்பவத்தில் உதவிய அதிகாரிகளும் குடியிருப்பாளர்களும் அவர்களின் செயலுக்காகப் பொதுப் பாராட்டுக்குத் தகுதியானவர்கள் என்றும் இக்காலத்தில் இதுபோன்ற காட்சியைப் பார்ப்பது அரிது என்பதால் இது மனதை மிகவும் நெகிழ வைத்தது என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்