ஊட்ரம் எம்ஆர்டி நிலையத்தில் மின்படிக்கட்டு கைப்பிடி மீது சிறுநீர் கழித்ததற்காக சீனாவைச் சேர்ந்த லி குவோ ருய்க்கு, 41, $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அவர், சிறுநீர் கழித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
செவ்வாய்க் கிழமை (ஜனவரி 14) பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்த ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார்.
லியின் வழக்கு மூன்று இடங்களில் சிறுநீர் கழித்த சம்பவங்கள் தொடர்பானது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தானா மேரா எம்ஆர்டி நிலையத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம், பொத்தோங் பாசிர் எம்ஆர்டியில் நடைபெற்றது. இது பற்றிய விவரம் நீதிமன்ற வழக்கில் தெரிவிக்கப்படவில்லை.
ஊட்ரம் பார்க் எம்ஆர்டி சம்பவத்தைப் பற்றி பேசிய துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெரிமி பின், வர்த்தக நோக்கத்திற்காக ஜனவரி 2ஆம் தேதி லி சிங்கப்பூர் வந்ததாகத் தெரிவித்தார்.
ஜனவரி 10ஆம் தேதி மாலை 7.00 மணிக்கும் 9.00 மணிக்கும் இடையே வெஸ்ட்கேட்டுக்கு உணவருந்தச் சென்ற லி, அதிக அளவு பீர் மதுபானம் குடித்து போதையில் இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அன்று இரவு பத்து மணியளவில் அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் உள்ள ஹோட்டலுக்குத் திரும்புவதற்காக ஊட்ரம் பார்க் எம்ஆர்டி நிலையத்திலிருந்து வெளியேறும்போது கீழ்நோக்கிச் செல்லும் மின்படிக்கட்டின் கைப்பிடி மீது அவர் சிறுநீர் கழித்தார்.