பள்ளிகளுக்கு அருகில் உள்ள சாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ‘முழு நாள் வேக வரம்பு’ விதிமுறை அமல்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் மொத்தம் 1,918 அதிவேக விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 31 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்தப் புள்ளிவிவரங்கள், சிறுவர்கள் நடமாடும் பகுதிகளில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.
இதற்கு முன்பு, தொடக்கப்பள்ளிகளுக்கு அருகிலுள்ள சாலைகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் என்ற வேக வரம்பு, மாணவர்கள் பள்ளிக்கு வரும் மற்றும் கலைந்து செல்லும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நடைமுறையில் இருந்தது.
ஆனால், இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இந்த விதிமுறை மாற்றியமைக்கப்பட்டு, நாள் முழுவதும் அனைத்து நேரங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான புதிய நடைமுறையின்கீழ், முதியோருக்கு உகந்த சாலைகளாகக் கருதப்படும் ‘வெள்ளி மண்டலங்கள்’ அதிவேகமாகச் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்குக் கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.
இந்தச் சாலைகளில் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு வழக்கமான அதிவேகத்திற்கான அபராதங்களுடன் கூடுதலாக $100 வெள்ளி அபராதமும், இரண்டு கூடுதல் தண்டனைப் புள்ளிகளும் விதிக்கப்படும். சாலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து வாகன ஓட்டுநர்களும் வேக வரம்புகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

