மூத்த ராணுவ வல்லுநர்களாக மொத்தம் 202 சிங்கப்பூர் ஆயுதப்படைப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) நியமிக்கப்பட்டுள்ளனர்.
தெமாசெக் கிளப் வளாகத்தில் நடைபெற்ற 29வது மூத்த ராணுவ வல்லுநர் நியமன விழாவில் தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ராணுவ வல்லுநர் திட்டத்தின் வெற்றிகரமான நிறைவையும் புதிய ராணுவ வல்லுநர்களின் அடுத்த கட்டத்தின் தொடக்கத்தையும் குறிக்கும் முக்கிய மைல்கல்லாக இவ்விழா அமைந்தது.
இந்தத் திட்டம், பொறியியல், உளவியல், இணையப் பாதுகாப்பு, ராணுவ மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஆழ்ந்த அறிவும் செயல்திறனும் தேவைப்படும் பணிகளுக்கு சிங்கப்பூர் ஆயுதப்படைப் பணியாளர்களைத் தயார்படுத்துகிறது.
அதே சமயம், தலைமைத் திறனையும் செயல்பாட்டு நிபுணத்துவத்தையும் வளர்க்கும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு, ராணுவ வல்லுநர்கள் தங்கள் துறைகளில் முக்கியப் பொறுப்புகளுக்குத் தலைமை ஏற்கவும் உதவுகிறது.
புதிதாகப் பணியமர்த்தப்பட்ட மூத்த வல்லுநர்களில் 29 பேர் ஆயுதப்படையிலும், 29 பேர் கடற்படையிலும், 77 பேர் ஆகாயப்படையிலும், 67 பேர் மின்னிலக்க, உளவுத்துறைப் படையிலும் பணிபுரிகிறார்கள்.
சிங்கப்பூர் ஆயுதப்படையில் புதுமையை ஊக்குவிப்பதிலும் துறைசார்ந்த ஆழ்ந்த நிபுணத்துவத்தை வளர்ப்பதிலும் ராணுவ வல்லுநர்கள் வகிக்கும் முக்கியப் பங்கை மூத்த துணையமைச்சர் ஸாக்கி தமது உரையில் வலியுறுத்தினார்.
“தொழில்நுட்பம் காலத்தோடு மாற்றம் அடைந்து பழமையாகிவிடும். ஆனால், இன்றும் எதிர்காலத்திலும் நமது மக்கள்தான் நம்முடைய செயல்பாடுகளின் மையமாக இருப்பார்கள்,” என அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய ராணுவ வல்லுநர்கள் தங்கள் பொறுப்புகளைத் திடமான நம்பிக்கையுடனும் தெளிவான நோக்கத்துடனும் ஏற்க வேண்டும் என ஊக்குவித்த திரு ஸாக்கி, சிங்கப்பூரின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அவர்களது அறிவும், விடாமுயற்சியும், தனித்துவமான கண்ணோட்டங்களும் முக்கியப் பங்காற்றும் என்றும் கூறினார்.
நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான 4ஆம் நிலை ராணுவ வல்லுநர் வி. யோகினிதா, 28, மின்னிலக்க, உளவுத்துறைப் படையில் மூத்த ராணுவ உளவு வல்லுநராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இதற்கு முன், அவர் மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கான சிறப்புக் கல்வி ஆசிரியராகச் செயல்பட்டிருந்தார். அந்த அனுபவம், அவருக்குத் தகவமைப்பு, கருணை, உறுதியான தொடர்புத் திறன், மனிதநேயம் போன்ற முக்கியமான பண்புகளைக் கற்றுக்கொள்ள உதவியதாக அவர் கூறினார். அந்த நற்பண்புகளைத் தனது புதிய வேலைச்சூழலில் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்
“முந்தைய ராணுவ அனுபவம் எனக்கு இல்லாததால் இதுபோல் ஒரு முற்றிலும் வேறுபட்ட பயணத்தைக் கண்மூடித்தனமான நம்பிக்கையுடன்தான் மேற்கொண்டேன். ஆனால், இங்கே எனக்கென்று ஒரு புதிய நோக்கத்தைக் கண்டறிந்தேன்.
“என் தளபதிகளின் வழிகாட்டலும், நண்பர்களின் ஊக்கமும், குறிப்பாக என் குடும்பத்தின் உறுதியான ஆதரவுமே என்னை இந்த நிலைவரை முன்னேற வைத்தது,” என அவர் உணர்வுபூர்வமாக கூறினார்.
கடினமான பயிற்சி, கற்றல் சவால்கள் இருந்தபோதிலும், குழுவினரின் நட்புறவும் ஊக்கமும் அவற்றை வெற்றிகரமாகச் சமாளிக்க உதவியதாகவும் செல்வி யோகினிதா குறிப்பிட்டார்.
41 வயதான 4ஆம் நிலை ராணுவ வல்லுநர் ரகு ராமன் ராஜேந்திரன், கடற்படையில் நீர்மூழ்கிக் கப்பல் உதவித் தலைவர் பொறியாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். கடல்துறைப் பொறியாளராக முந்தைய பணியில் பயிற்சிபெற்ற அவர், சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்தது ஒரு நீண்டகால கனவு நனவானதற்குச் சமம் எனக் கூறினார்.
“தனியார் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றியபின், என் நாட்டின் பாதுகாப்பில் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என்ற ஆசை வலுவடைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்க எந்த வயதும் தாமதமில்லை என்று நான் நம்புகிறேன்,” என்றார் திரு ரகு.
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கற்றல் சூழலுக்குத் திரும்பிய அவர், தமது பயிற்சியாளர்களும் இளம் பயிற்சி சகாவும் தமக்கு முழுமையான ஆதரவை அளித்ததாகக் குறிப்பிட்டார். “இங்கே காணப்படும் ஆதரவான, ஒன்றுபட்ட பணிச்சூழலை நான் இதுவரை எங்கேயும் அனுபவித்ததில்லை,” என்று அவர் கூறினார்.
தற்காப்புத் துறையில் நீடித்த, அர்த்தமுள்ள ஒரு பயணத்தை மேற்கொள்ள விரும்பும் அவர், இந்தப் புதிய பாதையில் தம்மால் சிறந்து விளங்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார்.

