137 தலைசிறந்த ஊழியர்களைக்‌ கௌரவித்த மே தின விருது

3 mins read
ff7a10f3-bc90-45c0-bf83-9709093484e7
முன்மாதிரி ஊழியர் விருதை பெற்ற செல்வி பிரித்தி மோகனன். - படம்: தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ரஸ்
multi-img1 of 3

மனம் விட்டு பேசினால் மனத்திலுள்ள சுமை குறையும் என்பதை மனப்பூர்வமாக நம்புகிறார் 33 வயது பிரித்தி மோகனன்.

13 ஆண்டுகளாக ஸ்போர்ட் சிங்கப்பூரில் (ஸ்போர்ட்எஸ்ஜி) பணிபுரியும் இவர், தற்போது நிலை 2 துணை மேலாளர் பதவியில் இருக்‌கிறார்.

கொவிட்-19 காலத்தில், ‘ஓப்ஸ் சயாங்’ எனப்படும் செயல்திட்டத்தின்படி, சிங்கப்பூரின் விளையாட்டு நிலையங்கள் வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடமாக மாற்றி அமைக்கப்பட்டன. அந்த இக்கட்டான சூழ்நிலையில் எல்லோரும் மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கு தயங்கிக்கொண்டிருந்தபோது ஊழியர்களுக்‌கு உதவி புரிய வேண்டும் என்ற மனவுறுதியுடன் செயல்பட்ட பிரித்திக்‌கு 2020ல் கொவிட்-19 அங்கீகார விருது ஒன்று வழங்கப்பட்டது.

மனநலம் பற்றிய தொடர்ச்சியான கற்றல் எப்போதுமே வேண்டும் என்று நம்புகிறார் பிரித்தி. அதற்குத் தொடர்பான பயிற்சிகளைப் பெற்று, தன் தகுதிகளை மென்மேலும் மேம்படுத்தி வருகிறார் அவர்.

“கடினமான காலகட்டங்களில் நம்மைச் சுற்றியிருப்போரின் நலனிலும் மகிழ்ச்சியிலும் ஒரு முக்கிய பங்களிப்பது எனக்‌கு மனநிறைவை அளிக்கிறது,” என்று கூறினார் பிரித்தி. மேலும் முன்பின் தெரியாதவர்கள்கூட ஏதேனும் உதவி வேண்டுமென்றால் தயங்காமல் தன்னிடம் வந்து பேசுவதற்கு வழிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இவருக்‌கு தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) முன்மாதிரி ஊழியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் என்டியுசி மே தின விருதைப் பெற்ற 137 பேரில் பிரித்தியும் ஒருவர்.

அரசாங்கப் பிரதிநிதிகள், முன்மாதிரி ஊழியர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகப் பங்காளிகள் போன்றவர்களை அங்கீகரிக்க ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, இவ்வாண்டு வரலாற்றிலேயே முதல்முறையாக ஆக அதிகமானவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவர்களுடன் 42 அமைப்புகளும் என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கிடமிருந்து மே 10ஆம் தேதி மெரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மையத்தில் விருதுகள் பெற்றன.

இவ்வாண்டின் மே தின விருதுகளில் உயரிய விருதான சிறப்பு சேவை நட்சத்திர விருது என்டியுசியின் முன்னாள் தலைவர் மேரி லியூவிற்கு வழங்கப்பட்டது.

முதல்முறையாக மே தின விருதுகளை வெளிநாட்டு ஊழியர்களின் தூதர்களுக்‌கும் வீட்டுப் பணியாளர்களின் தூதர்களுக்‌கும் வழங்குவதாக என்டியுசியின் தலைவர் கே தனலெட்சுமி தமது வரவேற்புரையில் கூறினார். மேலும், “சக ஊழியர்களை அணுகி, அவர்களுக்கு உதவி புரியும் இவர்கள் முக்கியமான நபர்கள்,” என்றும் அவர் சொன்னார்.

அவர்களில் ஒருவரான 50 வயது லெட்சுமணன் முரளிதரனுக்‌குத் தொழிலாளர் இயக்கத்தின் பங்காளி விருது வழங்கப்பட்டுள்ளது.

28 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணிபுரிந்துவரும் அவர், தமது சக ஊழியர்களின் சிரமங்களைத் தாம் நன்கு அறிந்துள்ளதாகவும் தம்முடைய உதவி மற்றவர்களுக்குப் பயனளிக்கும் என்று நம்புவதாகவும் சொன்னார்.

2018ல், வெளிநாட்டு ஊழியர் நிலையத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய தொடங்கினார் திரு முரளிதரன். கொவிட் காலத்தில் ஊழியர்கள் விடுதிகளுக்‌கு மூன்று வேளை உணவையும் கைப்பேசி சிம் அட்டைகளையும் விநியோகித்ததோடு, மோசடி, சம்பள விவகாரம், விபத்து போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவோருக்கு உதவி செய்யும் பல முயற்சிகளிலும் இவர் ஈடுபட்டார்.

இந்த விருதைச் சற்றும் எதிர்பார்க்காத திரு முரளிதரன், சக ஊழியர்களுக்கு உதவுவது தமது கடமை என்றும் இது போன்ற விருதுகள் வழங்கப்படுவது மற்ற ஊழியர்களுக்கும் ஓர் ஊக்குவிப்பாக அமையும் என்றும் கருதுகிறார்.

“என்னைப்போல் சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக வசித்துவரும் ஊழியர்கள் வருங்காலத்தில் இங்கு பணிக்‌கு வருபவர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்ய முன்வர வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவரான 54 வயது தனபால் குமாருக்‌கு தொழிலாளர் தோழர் (Comrade of Labour) விருது வழங்கப்பட்டது. 14 ஆண்டுகளாக சங்கத்தின் உறுப்பினராகப் பணியாற்றிவரும் இவர், அதில் 3 ஆண்டுகளாகப் பொதுச் செயலாளராகவும், கடந்த 4 ஆண்டுகளாகச் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

“ஒரு தொழிற்சங்கம் என்பது முக்கியமாக உறுப்பினர்களின் மேம்பாட்டிற்கு உதவும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும்,” என்றார் திரு தனபால் குமார். தமிழாசிரியர்களின் பணி மேம்பாடு, தமிழ் மொழியின் மேம்பாடு போன்ற முயற்சிகளில் சங்கம் ஈடுபட்டு வருகிறது.

ஆசிரியர் பணி கடினமான ஒன்று என்றும் அதிலும் மொழி ஆசிரியராக இருப்பது உண்மையிலேயே சவால் மிகுந்தது என்றும் திரு தனபால் குமார் கூறினார். அவர்கள் எதிர்கொள்ளும் மனச்சோர்வைப் போக்‌கும் நோக்‌கத்துடன் பல நிகழ்ச்சிகளை சங்கத்தில் வழிநடத்துகிறார் அவர்.

தமக்‌கு இந்த விருது கிடைத்தது தமிழ் ஆசிரியர்களுக்குரிய பெருமை என்று கூறினார் திரு தனபால் குமார்.

குறிப்புச் சொற்கள்