இவ்வாண்டின் ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் மரத்தான்’ நெட்டோட்டத்தில் இடம்பெறவுள்ள புதிய பாதைகளை ஏற்பாட்டாளர்கள் புதன்கிழமையன்று (செப்டம்பர் 4) அறிவித்துள்ளனர்.
வரும் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று நெட்டோட்டத்திலும் அதற்குக் குறைவான நீளம்கொண்ட பாதையிலும் ஓடுவோர் எஃப் 1 பிட் கட்டடத்தில் நெட்டோட்டத்தைத் தொடங்குவர். அவர்கள் எஸ்பிளனேட், மெர்லயன், ஃபுல்லர்ட்டன் ஹோட்டல், தேசிய விளையாட்டரங்கம், மரினா பே சேண்ட்ஸ் போன்ற இடங்களைத் தாண்டி ஓடுவர்.
சென்ற ஆண்டின் ஸ்டான்சார்ட் நெட்டோட்டம் தேசிய விளையாட்டரங்கில் நிறைவடைந்தது. இவ்வாண்டு அது ஆண்டர்சன் பாலத்தில் நிறைவடையும்.
டிசம்பர் எட்டு முதல் ஜனவரி ஐந்தாம் தேதி வரை ஆசியான் காற்பந்துப் போட்டி நடைபெறுவது அதற்குக் காரணம். அப்போட்டியின் இரண்டு ஆட்டங்களாவது தேசிய விளையாட்டரங்கில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.