தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் கவர்ந்த சமூகநலன் திட்டங்கள்: வரும் ஆண்டில் என்ன எதிர்பார்க்கலாம்

3 mins read
ba89ddbc-59f3-4119-9ac6-f23f737890ba
குறைந்த வருமானக் குடும்பங்களின் குழந்தைகள் படிக்க அரசாங்க உதவி. - கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

2025 புத்தாண்டு பிறக்க இருக்கும் வேளையில் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு சமூகநலன் அம்சங்கள் இடம்பெற்றன.

10 வார பெற்றோர் பகிர்வு விடுப்பு அறிமுகம் தொடங்கி கைக்குழந்தைக் கவனிப்புக்கான புதிய தெரிவு வரையிலானவை இவ்வாண்டின் ஆகப்பெரிய சமூகச் செய்திகளாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்க்கிறது.

அதேபோல, புதிய ஆண்டில் குடும்பங்கள் எதிர்பார்க்க இருப்பவற்றையும் அது பட்டியலிட்டு உள்ளது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அவசரநிலை சமாளிப்புக் குழு 2025 ஜனவரி 2 முதல் குடும்ப வன்முறையை உடனடியாகத் தடுத்து நிறுவத்துவதற்கான அவசர ஆணையைப் பிறப்பிக்க இருப்பது ஆண்டின் தொடக்கத்தில் நிகழ இருக்கும் சமூகநலன் நடவடிக்கை.

1. கைக்குழந்தைக் கவனிப்பு முன்னோடித் திட்டம்:

பிறந்து இரண்டு மாதம் முதல் 18 மாதம் வரையிலான குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு, கைக்குழந்தை கவனிப்புக்கென மேலும் ஒரு தெரிவு வழங்கப்படுகிறது.

அரசாங்கத்தின் இந்தப் புதிய முன்னோடித் திட்டம் மூன்றாண்டுகளுக்கு நடப்பில் இருக்கும்.

சில கைக்குழந்தைக் கவனிப்பு அமைப்புகள் இந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் திட்டத்திற்கான சேவைகளை வழங்கி வருகின்றன.

கிடிபிலிஸ் (Kidibliss), நன்னிபுரோ (NannyPro), பட்லர் நிறுவனத்தின் எடுநன்னி (EduNanny) ஆகியன அந்த அமைப்புகள்.

கைக்குழந்தைகளைக் கவனிக்க, கட்டுப்படியான, பாதுகாப்பான, நம்பத்தகுந்த தெரிவுகளைப் பெற்றோர்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்து உள்ளது.

குழந்தையைக் கவனிக்க வாரத்தில் தங்களுக்கு உதவி தேவைப்படும் நாள்களைப் பெற்றோர்கள் தேர்ந்து எடுக்கலாம். அத்துடன், அதிகமான நீக்குப்போக்கு நேரங்களுக்கான தெரிவு அவர்களுக்கு இருக்கும்,

2. குடும்ப வன்முறையைத் தடுத்தல்

குடும்பத்தில் வாழ்க்கைத் துணைகளுக்கு இடையிலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கடந்த செப்டம்பர் மாதம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

2023ஆம் ஆண்டு வாழ்க்கைத் துணைகளுக்கு இடையில் 2,008 புதிய வன்செயல்கள் பதிவாயின. 2022ஆம் ஆண்டின் 1,741 சம்பவங்களைக் காட்டிலும் அது அதிகம்.

குறைந்த பாதுகாப்பு முதல் கணிசமான பாதுகாப்பு வரையில் உள்ள குழந்தைகளைத் துன்புறுத்தும் சம்பங்களும் சிறிதாக அதிகரித்தன. 2022ஆம் ஆண்டு 2,760 குழந்தைத் துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவான நிலையில் கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 2,787 ஆனது.

குடும்ப வன்முறை பற்றி புகார் செய்வதற்கான விழிப்புணர்வு அதிகரித்தது சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம் என்று அமைச்சு கூறி இருந்தது.

குடும்ப வன்முறையைத் தடுக்க 24 மணிநேர அவசரச் சேவை 2025 ஜனவரி 2 முதல் அறிமுகம் காணும். அதிக ஆபத்துள்ள குடும்ப வன்முறைச் சம்பவங்களின்போது அவசர உத்தரவுகளை அமைச்சின் அவசரநிலை சமாளிப்புக் குழு பிறப்பிக்கும்.

அந்த குடும்ப வெளியேற்ற உத்தரவு, வன்முறையில் ஈடுபடுவோர் பாதிக்கப்பட்டோரின் வட்டாரத்தில் நுழைவதைத் தடுக்கிறது.

அதே நாளில், மாதர் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் நடப்புக்கு வருகின்றன.

3. குறைந்த வருமானக் குடும்பத்திற்கு ஆதரவு

காம்லிங்க் பிளஸ் திட்டத்தில் இடம்பெற்று உள்ள குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை பாலர் பள்ளியில் சேர்க்கும்போது ஊக்கத்தொகைகளைப் பெறுவர். குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்கிறார்களா என்பதை அந்தக் குடும்பங்கள் உறுதி செய்வதை ஊக்குவிக்கும் அந்த முறை கடந்த ஆகஸ்டில் அறிமுகம் கண்டது.

பாலர் பள்ளியில் சேர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருமுறை தொகையாக $500 குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் அந்தக் குழந்தைக்கு மூன்று வயதாகும்போது வரவு வைக்கப்படும்.

காம்லிங்க் பிளஸ் திட்டம், குழந்தைகளுடன் உள்ள குறைந்த வருமானக் குடும்பங்களின் சமூக நடமாட்டத்தை ஊக்குவிக்க கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2023 டிசம்பர் வரை அந்தத் திட்டத்தில் 9,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெற்று இருந்தன.

குறிப்புச் சொற்கள்