தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குவெப்பமான ஆண்டு

2 mins read
1ed56a6c-c335-4f99-bb12-aab412bde39d
2024ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு சுட்டெரிக்கும் ஆண்டாக இருந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், 2024ஆம் ஆண்டில் கடும் வெப்பத்தை அனுபவித்துள்ளது. இதற்கு முன் 2019, 2016 ஆகியன வெப்பமான ஆண்டுகளாக பதிவாகின.

அதாவது 2024ஆம் ஆண்டின் சராசரி வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸ் என்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) அன்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

2024ஆம் ஆண்டில் அதிக மழையும் பெய்தது. அதன் நீண்டகால சராசரியான 2,534.3 மில்லி மீட்டருக்கு மேல் 8.1 விழுக்காடு கூடி 2,739.8 ஆக பதிவானது. இது 1980க்குப் பிறகு 12வது அதிகபட்ச நிலை.

நீண்டகால சராசரி என்பது 1991 முதல் 2020 வரையிலான 30 ஆண்டு காலத்தைக் குறிக்கிறது.

மேலும், தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசைத் தாண்டிய முதல் முழு ஆண்டு 2024 என்று அறிவியலாளர்கள் ஜனவரி 10ஆம் தேதி தெரிவித்தனர்.

2024ஆம் ஆண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 1850ஆம் ஆண்டுக்கும் 1900ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை விட 1.6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அப்போது மனிதர்கள் கரியமில வாயுவை வெளியிடும் புதைபடிவ எரிபொருள்களை பெரிய அளவில் எரிக்கத் தொடங்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் பருவநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் இயக்குநரான கார்லோ பூன்டெம்போ ராய்ட்டர்சிடம் கூறுகையில், “2024ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்திற்கான வெப்பமான அல்லது இரண்டாவது வெப்பமான மாதமாக இருந்துள்ளது,” என்றார்.

மிகவும் கடுமையான பருவநிலை பேரழிவுகளைத் தவிர்க்க, 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசைத் தாண்டுவதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று அரசாங்கங்கள் உறுதியளித்தன.

வெப்பமான ஆண்டுக்கு எல்நினோ பருவநிலை முக்கிய காரணமாகும். அதேபோல ஆண்டு தொடக்கத்திலும் அதிக மழை பெய்தது.

எல்நினோவின் விளைவாக, சிங்கப்பூர் உட்பட தென்கிழக்காசியாவில், கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் காற்று வீசுவதால் வெப்பமான, வறண்ட வானிலை ஏற்படலாம்.

2024ஆம் ஆண்டு, தொடர்ந்து நான்காவது ஆண்டாக சிங்கப்பூரின் சராசரி வெப்பநிலை பத்து ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன்படி புதிய குறியீடு 28.11 டிகிரி செல்சியஸ். இது 2014 முதல் 2023 வரைக்கான முந்தைய உச்சத்தைவிட 0.05 டிகிரி செல்சியஸ் கூடுதலாகும்.

2024ஆம் ஆண்டில் மாதாந்திர சராசரி வெப்பநிலை ஜனவரி மாதத்தைத் தவிர மற்ற மாதங்களிலும் நீண்ட கால சராசரியை விட அதிகமாக இருந்தது.

அந்த ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்கள், சிங்கப்பூரில் மிகவும் வெப்பமான மாதங்களாக அமைந்தன. அவற்றின் சராசரி வெப்பநிலை முறையே 29.4 டிகிரி செல்சியஸ் மற்றும் 29.3 டிகிரி செல்சியசாக இருந்தன.

குறிப்புச் சொற்கள்