சிங்கப்பூரில் ஏறக்குறைய 55,000 தேவைகேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் (பிடிஓ) இவ்வாண்டிலிருந்து 2027ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விற்பனைக்கு வரவிருக்கின்றன. இதற்குமுன் அறிவிக்கப்பட்ட 50,000 வீடுகளைவிட அது 10 விழுக்காடு அதிகம்.
அவற்றுள் கிட்டத்தட்ட 3,100 வீடுகள் குறுகிய காலத்துக்குள், அதாவது மூவாண்டுக்கும் குறைவான காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும்.
கூடுதலான பிடிஓ வீடுகள் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி மறுவிற்பனை சந்தையில் உள்ள தேவையைக் குறைத்து மறுவிற்பனை வீட்டு விலைகளைக் கட்டுப்படுத்த உதவும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
மறுவிற்பனை வீட்டு விலைகள் குறித்து மக்களுக்குக் கவலைகள் இருக்கலாம் என்ற திரு சீ, முதன்மை இடங்களில் உள்ள வீடுகளின் விலைகள் அதிகமாக இருப்பது இயல்பு என்றார்.
தெமபனிஸ், பொங்கோல் ஆகிய பேட்டைகளில் 70 அல்லது அதற்கும் அதிகமான குத்தகை காலத்தைக் கொண்டிருக்கும் நான்கறை மறுவிற்பனை வீடுகள் $650,000லிருந்து $700,000 வரை விற்பனையாகும். ஆனால் அதே போன்ற வீடு செம்பாவாங், ஈசூன் ஆகிய பகுதிகளில் $600,000க்கும் குறைந்த விலையில் விற்பனையாகலாம் என்று திரு சீ விளக்கம் அளித்தார்.
“கூடுதலான பிடிஓ வீடுகளின் குறைந்த குடியிருப்புக் காலம் 2026ஆம் ஆண்டிலிருந்து நிறைவடைவதால் மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கிறோம். மறுவிற்பனை வீட்டு விலைகள் மேலும் சீரடையும்,” என்று திரு சீ குறிப்பிட்டார்.
இவ்வாண்டு கிட்டத்தட்ட 8,000 பிடிஓ வீடுகள் குறைந்த குடியிருப்புக் காலத்தை எட்டும் என்ற சீ, அடுத்த ஆண்டு 13,500 வீடுகளும், 2027ஆம் ஆண்டு 15,000 வீடுகளும், 2028ஆம் ஆண்டு 19,500 வீடுகளும் குறைந்த குடியிருப்புக் காலத்தை எட்டும் என்றார்.
மறுவிற்பனை வீட்டு விலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றார் திரு சீ.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு, குறுகிய காத்திருப்புக் காலத்தைக் கொண்ட 4,500 வீடுகள் விற்பனைக்கு விடப்படும். இதற்குமுன் அத்தகைய 3,800 வீடுகளை விற்பனைக்குவிட திட்டமிடப்பட்டது.
2026, 2027ஆம் ஆண்டுகளில் குறுகிய காத்திருப்புக் காலத்தைக் கொண்ட 4,000 வீடுகள் ஒவ்வோர் ஆண்டும் விற்பனைக்கு விடப்படும். இதற்குமுன்னர் ஆண்டுக்கு 2,000லிருந்து 3,000 வீடுகளை விற்பனைக்கு விட திட்டமிடப்பட்டிருந்தது.
இதுவரை இவ்வாண்டில் இடம்பெற்ற இரண்டு பிடிஓ திட்டங்களின்கீழ் 10,579 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. அவற்றுள் 1,396 வீடுகள் குறுகிய காலத்துக்குள் கட்டி முடிக்கப்படும்.