சிங்கப்பூர் அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பயணத்துறைத் திட்டங்களுக்குக் கூடுதலாக $740 மில்லியனைச் செலவிட உள்ளதாக வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்தின் வருவாய் எதிர்பார்ப்புகளையும் கடந்து $32.8 பில்லியனைத் தொட்டதாக அவர் கூறினார்.
ரிசார்ட்ஸ் வோர்ல்ட் மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (மே 8) நடைபெற்ற பயணத்துறை மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், 2025ஆம் ஆண்டு பயணத்துறை வருவாய் $29 பில்லியன் முதல் $30.5 பில்லியன் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அதனைவிட அதிக வருவாய் கிடைத்ததாகச் சொன்னார்.
மேலும் 2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அந்த வருவாய் 10 விழுக்காடு வளர்ச்சி கண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
உலக நாடுகளில் இருந்து கடந்த ஆண்டு 16.9 மில்லியன் பயணிகள் இங்கு வந்துசென்றதாகவும் திரு ஃபூ தமது உரையில் குறிப்பிட்டார்.
இவ்வாண்டில் சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் எதிர்பார்க்கும் வளர்ச்சி குறித்தும் அவர் விவரித்தார்.
அனைத்துலகச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு 17 மில்லியனுக்கும் 18 மில்லியனுக்கும் இடையில் இருக்கும் என்றும் பயணத்துறை மூலம் கிடைக்கும் வருவாய் $31 பில்லியனுக்கும் $32.5 பில்லியனுக்கும் இடையில் இருக்கும் என்றும் கழகம் கணிக்கிறது.
அதேநேரம், மத்திய கிழக்கில் நீடிக்கும் எரிசக்தி நெருக்கடி, பயனீட்டாளர் செலவினங்களில் அதன் விளைவுகள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் போன்ற பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள, சிங்கப்பூர் அரசாங்கம், பயணத்துறைக்குக் கூடுதலாக $740 மில்லியன் நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது என்றார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சருமான திருவாட்டி ஃபூ.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டு பயணத்துறை மேம்பாட்டு நிதிக்கு $300 மில்லியன் அளிக்கப்பட்ட வேளையில், அந்தத் தொகையின் அளவு இரட்டிப்பாக உள்ளது.
இந்தப் புதிய நிதி ஒதுக்கீடு ‘சுற்றுப்பயணம் 2040’ என்னும் திட்டத்தின்கீழ் சிங்கப்பூரின் இலக்குகளை அடைய ஆதரவு வழங்கும். அதன்மூலம் வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்தை வகுத்து, சிங்கப்பூர் தொடர்ந்து ஈர்க்கக்கூடிய சுற்றுலாத்தலமாக இருப்பதை உறுதிசெய்யவும் அது உதவும் என்றார் திருவாட்டி ஃபூ.

