1,000க்கும் மேற்பட்ட புதுவரவுகளால் செழிப்புறும் சிங்கப்பூர் வனவுயிர்ப் பூங்காக்கள்

1,000க்கும் மேற்பட்ட புதுவரவுகளால் செழிப்புறும் சிங்கப்பூர் வனவுயிர்ப் பூங்காக்கள்

1 of 2
படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்
படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்

29 Jan 2026 - 8:45 pm

2 mins read

சிங்கப்பூரில் உள்ள ஐந்து வனவுயிர்ப் பூங்காக்கள் சென்ற ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குக் குட்டிகளை வரவேற்றன.

அவை 150க்கும் மேற்பட்ட விலங்கினங்களைச் சேர்ந்தவை.

மிகவும் அருகிவரும் இனங்களான செங்கால் லுங்கூர் குரங்கினமும், ‘ஹூலியன்’ சிறுத்தைப் பல்லியும் அவற்றுள் அடங்கும் என்று மண்டாய் வனவிலங்குக் குழுமம் வியாழக்கிழமை (ஜனவரி 29) தெரிவித்தது.

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், நைட் சஃபாரி, ரிவர் வொண்டர்ஸ், பறவைகள் மகிழ்வனம், ரெயின்ஃபாரஸ்ட் வைல்டு ஏஷியா ஆகிய ஐந்து வனவுயிர்ப் பூங்காக்களில் உள்ளவற்றில் கிட்டத்தட்ட 50 வகை விலங்கினங்கள், அனைத்துலக இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் ‘அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்’ விலங்கினப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டைச் சிறப்பான ஆண்டு எனக் குறிப்பிட்டார் மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் துணைத் தலைமை நிர்வாகி செங் வென் ஹோர்.

ஒவ்வொரு புதிய வரவும் அவற்றைக் கவனித்துக்கொள்ளும் குழுக்களுக்குப் பெருமைமிகு தருணம் எனறார் அவர்.

கடந்த ஜூன் 25ஆம் தேதி சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நெடுங்கால் பூனை வகையான ‘செர்வல்’ பூனைக்குட்டிகள் பிறந்தது குறிப்பிடத்தக்க நிகழ்வு.

கடந்த 2023ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ரோட்டர்டாம் விலங்கியல் தோட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ‘லைலா’ எனும் செர்வல் பூனை, ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரு குட்டிகளை ஈன்றது.

‘செர்வல்’ வகை நெடுங்கால் பூனை.
‘செர்வல்’ வகை நெடுங்கால் பூனை. - படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்

இதனிடையே, கவனத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்ட வெப்பநிலை, ஈரப்பதம், வெளிச்சத்துடன் இயற்கையான பருவச் சூழலை வடிவமைத்துக் கொடுத்தது ‘ஹூலியன்’ சிறுத்தைப் பல்லி மற்றும் சீனத் தீவயிற்றுப் பல்லியின் இனப்பெருக்கத்திற்கு உதவியது.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஜூன் மாதம் நைட் சஃபாரியில் மூன்று செந்நாய்க்குட்டிகள் பிறந்தன. அவை நன்கு வளர்கின்றனவா என்று கண்காணிப்புப் படக்கருவி வழியாகக் கண்காணிக்கப்பட்டது.

பறவைகள் மகிழ்வனத்தில் முதன்முறையாகக் கடந்த நவம்பரில் கோழித்தாடை நாரை (wattled crane) பிறந்தது. நாரை இனங்களில் இரண்டாவது பெரிய இனமான அவ்வகை நாரை, வளர்ந்தபின் 6 முதல் 9 கிலோ எடைகொண்டதாக இருக்கும்.

உலகில் 200க்கும் குறைவான சக்கோரோ புறாக்களே விலங்கியல் பூங்காக்களில் உள்ளன.
உலகில் 200க்கும் குறைவான சக்கோரோ புறாக்களே விலங்கியல் பூங்காக்களில் உள்ளன.

அத்துடன், 2025 ஆகஸ்ட்டிலும் செப்டம்பரிலும் இரண்டு ‘சக்கோரோ’ புறாக்குஞ்சுகள் அங்குப் பிறந்தன. உலகில் 200க்கும் குறைவான சக்கோரோ புறாக்களே விலங்கியல் பூங்காக்களில் மனிதப் பராமரிப்பின்கீழ் உள்ளன.

குறிப்புச் சொற்கள்