தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2025 பள்ளிக் கல்வி ஆண்டு: ஜனவரி 2 முதல் நவம்பர் 21 வரை

2 mins read
edcbec5c-892f-4920-9b70-b5614028a322
கல்வி அமைச்சின்கீழ் வரும் பள்ளிகளுக்கு இது பொருந்தும். - படம்: சாவ்பாவ்

கல்வி அமைச்சின்கீழ் வரும் அனைத்து பாலர் பள்ளிகள், தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான அடுத்த கல்வி ஆண்டு 2025 ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலர் வகுப்பு 2ல் பயிலும் பிள்ளைகள், தொடக்கநிலை 2லிருந்து 6 வரை பயிலும் மாணவர்கள் ஆகியோருக்கான கல்வி ஆண்டு, முந்தைய ஆண்டுகளில் இருந்ததைப் போலவே மறுநாளான ஜனவரி மூன்றில் தொடங்கும் என்று கல்வி அமைச்சு திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 12) அறிவித்தது.

தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியா கல்வி நிலையம் ஆகியவற்றில் முதலாம் ஆண்டைத் தொடங்கவிருக்கும் மாணவர்களுக்கான கல்வி ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் தேதி தொடங்கும். அவற்றின் இதர மாணவர்களுக்கு ஜனவரி 13ஆம் தேதி கல்வி ஆண்டு ஆரம்பிக்கும்.

2025ல் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லேனியா கல்வி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நான்கு விடுமுறைக் காலங்கள் இருக்கும்.

கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள், தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான முதல் விடுமுறை காலம் மார்ச் மாதம் 15லிருந்து 23ஆம் தேதி வரை நீடிக்கும். அவர்களுக்கான இரண்டாம் விடுமுறை காலம் மே 31ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி நிறைவடையும். மூன்றாவது விடுமுறை காலம் செப்டம்பர் ஆறு முதல் 14 வரை நீடிக்கும். நவம்பர் 22 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நான்காவது விடுமுறை காலம் இடம்பெறும்.

தொடக்கக் கல்லூரி, மில்லேனியா கல்வி நிலைய மாணவர்களுக்கான முதல் மூன்று விடுமுறை காலங்கள் தொடக்கப் பள்ளிகளுக்கும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் வரும் அதே காலகட்டத்தில் இடம்பெறும். தொடக்கக் கல்லூரி முதலாம் ஆண்டு, மில்லேனியா கல்வி நிலைய முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான கடைசி விடுமுறைக் காலம் நவம்பர் 29 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிக்கும்.

தொடக்கக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் மில்லேனியா கல்வி நிலையத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குமான கடைசி விடுமுறை காலம், பொதுக் கல்விச் சான்றிதழ் ‘ஏ’ நிலைத் தேர்வு முடிந்தவுடன் தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிக்கும்.

மேலும், 2025ல் மூன்று பள்ளி விடுமுறை நாள்கள் வரும்.

ஜூலை ஆறாம் தேதி இளையர் தினம். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மறுநாளான திங்கட்கிழமையும் (ஜூலை 7) பள்ளி விடுமுறை நாளாக இருக்கும்.

செப்டம்பர் ஐந்து ஆசிரியர் தினம்.

சிறுவர் தினம், அக்டோபர் மூன்றாம் தேதி வருகிறது. இந்த விடுமுறை நாள், தொடக்கநிலை மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

கல்வி ஆண்டு விடுமுறை குறித்த விவரங்களைக் கல்வி அமைச்சின் https://www.moe.gov.sg/calendar இணையத்தளத்தில் பெறலாம்.

குறிப்புச் சொற்கள்