கடந்த 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் வானிலை இருவேறு துருவங்களை எட்டியது.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் (NEA) பிரிவான சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (MSS) திங்கட்கிழமை (மார்ச் 23) 2025ஆம் ஆண்டுக்கான வானிலை ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.
அதன்படி மார்ச் மாதம் அதிக மழை பெய்துள்ளது. அதற்கு மாறாக ஜூன் மாதமும் நவம்பர் மாதமும் வெயில் அதிகமாகி வெப்பமான மாதங்களாக இருந்துள்ளன. அதோடு வெப்பத்தால் ஏற்படும் அழுத்தம் 29 நாள்களுக்கு உணரப்பட்டது. அது 2024ஆம் ஆண்டில் ஏற்பட்ட 21 நாள்களைவிட அதிகமாகும்.
வெப்பநிலை கூடுவதற்கு கடந்த ஆண்டில் நீண்டநாள்கள் வெயில் இருந்ததும் ஒரு காரணமாகும்.
சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் வெப்பத்தை ஆய்வுசெய்யும் தொழில்நுட்பத்தைச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு விரிவாக்கியுள்ளதால், வானிலைக் கணிப்புகள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி ஆண்டின் ஆக வெப்பமான நாளாக செந்தோசாவில் WBGT முறையில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டது.
WBGT எனப்படும் முறைப்படி, காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், சூரியக் கதிர்வீச்சு ஆகியவை கணக்கிடப்படுகின்றன.
சூடான சுற்றுச்சூழலில் உடல் தன்னிச்சையாக குளிர்ச்சியடைய முடியாதபோது சிலருக்கு வெப்பத்தால் ஒருவித உடல் அழுத்தம் ஏற்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
‘எல் நினோ’, ‘லா நினா’ எனப்படும் பசிபிக் பெருங்கடலில் இயற்கையாகவே நிகழும் இருவகை பருவநிலை மாற்றங்கள் உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
கடந்த ஆண்டில் ‘லா நினா’ வகை பருவநிலை மாற்றம் இந்த வட்டாரத்தில் அதிக மழையைத் தந்தாலும், 2025ஆம் ஆண்டின் சராசரி வெப்பநிலை 28.1 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகியுள்ளது.
அது சிங்கப்பூரில் இதுவரை பதிவாகியுள்ள எட்டாவது ஆக அதிக வெப்பமான ஆண்டாகும். பருவநிலை மாற்றத்தால் விளையும் நீண்டநாள் பாதிப்பை அறிக்கையின் முடிவுகள் காட்டுகின்றன.
மக்கள் பருவநிலைக்கேற்றவாறு தங்களைத் தகவமைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளவேண்டும். எனவேதான் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைச் சமாளிக்கவும் குறைக்கவும் அரசாங்கம் அதனை 2026ஆம் ஆண்டின் தேசிய முன்னுரிமையாக வகுத்துள்ளது.

